புதிய கொரோனா திரிபு பல நாடுகளிலும் அடையாளம்: விழிப்பு நிலை அதிகரிப்பு

புதிதாக அடையாளம் காணப்பட்டிருக்கும் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திருபு பற்றிய அச்சம் உலகெங்கும் பரவி உள்ளது. இந்த தொற்றுக்கு எதிராக தமது மக்களை பாதுகாப்பதற்கு உலக நாடுகள் போராடி வருகின்றன.

இந்த புதிய மரபணு பிறழ்வு, வேகமாக பரவக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த திரிபு அவுஸ்திரேலியா, பிரிட்டன், ஜேர்மனி, இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரவு மற்றும் ஹொங்கொங் என பல நாடுகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் அச்சம் காரணமாக அனைத்து வெளிநாட்டவர்களும் இஸ்ரேலுக்குள் நுழைய இஸ்ரேல் தடை விதித்துள்ளது. இந்தத் தடை இரண்டு வாரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா உட்பட சிவப்புப் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து திரும்பும் இஸ்ரேலியர்கள் நிர்ணயிக்கப்பட்ட ஹோட்டல்களில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்த விதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் புதிய திரிபு என்று சந்தேகிக்கப்படும் ஏழு சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதோடு மாலாவியில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரோன் திரிபு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் இருந்து வந்த இருவரிடம் புதிய வைரஸ் திரிபு இருப்பதை அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. இந்த இருவரும் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் என்பதோடு அவர்களிடம் நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்படவில்லை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலியா, தென் கொரியா, பங்களாதேஷ், மாலைதீவு என பல நாடுகளும் தெற்கு ஆபிரிக்காவில் இருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு தடை விதித்துள்ளன.

ஐரோப்பாவில் நெருக்கடி

ஐரோப்பாவின் பல நாடுகளிலும் ஒமிக்ரோன் திரிபு என சந்தேகிக்கப்படும் தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அந்த பிராந்தியத்தில் தீவிர பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதோடு வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் போராடி வருகிறது.

மேற்கு ஆஸ்திரியாவின் அன்பிரக்கில், தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில் வந்த ஒரு பயணியிடம் புதிய வைரஸ் திரிபு என சந்தேகிக்கப்படும் நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மறுபுறம் நமீபியாவில் இருந்து வந்த ஒருவரிடம் ஒமிக்ரோன் திரிபு அடையாளம் காணப்பட்டதாக செக் குடியரசு தெரிவித்துள்ளது. இந்தத் தொற்றுக்கு உள்ளானவருடன் பயணித்த ஏழு பேர் மீது வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை பிரிட்டன், ஜேர்மனியில் இரு சம்பவங்கள் மற்றும் இத்தாலியில் ஒன்று என புதிய வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது. நெதர்லாந்து மற்றும் செக் குடியரசில் இந்த புதிய திரிபு என சந்தேகிக்கப்படும் பல சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் தென்னாபிரிக்காவில் இருந்து வந்த 61 பேரிடம் கொவிட்-19 இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு புதிய திரிபு ஏற்பட்டுள்ளதா என்று நெதர்லாந்து நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது.

இந்த புதிய திரிபு ஏற்கனவே தமது நாட்டில் இருக்கக் கூடும் என்று அமெரிக்காவின் முன்னணி தொற்றுநோய் நிபுணர் டொக்டர் அன்தனி பவுச்சி தெரிவித்துள்ளார். எனினும் அந்த நாட்டில் இதுவரை இந்த தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்படவில்லை.

ஒமிக்ரோன் வைரஸ் திரிபு மீண்டும் நோய்த் தொற்று ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளது என்றும் அதில் கவலை அளிக்கக்கூடிய சில மரபணு பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பல உலக நாடுகள் இந்த வைரஸுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இதனை ஒரு “கவலையளிக்கும் வைரஸ் திரிபாகவே” உலக சுகாதார அமைப்பு அடையாளப்படுத்தியுள்ளது. இந்த திரிபு அதிக தொற்றுத் தன்மை கொண்டது, உயிராபத்துக் கொண்டது மற்றும் தடுப்பூசியை தவிர்க்கக் கூடிய தன்மை கொண்டது என்பது பற்றி மேலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டி இருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

“இந்தத் திரிபு பெரும் எண்ணிக்கையான மரபணு பிறழ்வுகளைக் கொண்டிருப்பதோடு இந்த பிறழ்வுகளில் சில கவலை அளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன” என்று உலக சுகாதார அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது.

ஐரோப்பாவில் ஏற்கனவே நோய்த் தொற்று அதிகரித்து சில நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலேயே ஒமிக்ரோன் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆஸ்திரியா மற்றும் ஸ்லோவாக்கியாவில் ஏற்கனவே முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய திரிபு குறித்து முதலீட்டாளர்களிடையே கவலையை அதிகரித்திருக்கும் நிலையில் நிதிச் சந்தைகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திரிபில் உள்ள அனைத்து மரபணு பிறழ்வுகளும் ஆபத்தானவை இல்லை என்றாலும், சில பிறழ்வுகள் காரணமாக இதற்கு பரவும் தன்மை, தொற்றும் தன்மை, உடலில் அதிகமான பாதிப்பை உண்டாக்கும் தன்மை ஆகியவற்றின் இருப்பதால் இது கவலைக்குரிய திரிபு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திரிபின் இயல்பு காரணமாக ஏற்கனவே கொரோனா தொற்று உண்டானவர்களுக்கும் மீண்டும் நோய் தொற்றுவதற்கான அபாயம் உண்டாகியுள்ளது.

இதேவேளை தென்னாபிரிக்கா, புதிய வைரஸ் திரிபு குறித்து உலகை எச்சரித்ததற்காகத் தான் தண்டிக்கப்படுவதாகவும் நியாயமற்ற வகையில் நடத்தப்படுவதாகவும் குறைகூறியுள்ளது.

இதற்கிடையே, தென்னாபிரிக்காவைவிட்டு வெளியேற விரும்பும் பயணிகளால் அங்குள்ள விமான நிலையங்களில் நெரிசல் நிலவுகிறது. திடீரெனப் பல நாடுகள் தென்னாபிரிக்காவிலிருந்து புறப்படும் விமானங்களுக்குத் தடை விதித்ததால், பயணிகள் செய்வதறியாமல் திகைத்துப் போயுள்ளனர்.

Mon, 11/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை