வனிந்துவின் போராட்டம் வீண் இங்கிலாந்திடம் வீழ்ந்த இலங்கை!

இலங்கை அணிக்கு எதிரான ரி 20 உலகக் கிண்ண சுப்பர் 12 போட்டியில், சகலதுறையிலும் பிரகாசித்த இங்கிலாந்து அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இங்கிலாந்து அணி சுப்பர் 12 சுற்றில் தாம் ஆடிய போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையிலும், இலங்கை அணி மூன்று போட்டிகளில் ஒரு போட்டியை மாத்திரம் வெற்றி கொண்ட நிலையிலும் சார்ஜா அரங்கில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற இந்த போட்டியில் களமிறங்கியது.

ஆட்டத்தின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ரோய், டேவிட் மலான் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் ஆரம்பத்தில் ஆட்டமிழந்திருந்தாலும், பட்லர் மற்றும் இயன் மோர்கன் ஆகியோர் சிறந்த ஓட்டக்குவிப்பை வழங்கினர்.

இங்கிலாந்து அணி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய நிலையில், இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் தன்னுடைய கன்னி ரி20 சதத்தை பதிவுசெய்து, 101 ஓட்டங்களை பெற்றார். இவருக்கு அடுத்த படியாக, இயன் மோர்கன் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹஸரங்க 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதேபோன்று, வலதுகை சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன விக்கெட் எதனையும் கைப்பற்றாவிட்டாலும் தான் வீசிய 4 ஓவர்களில் 13 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும், தசுன் ஷானக மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டத்துடன் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை பெற்றது. எனினும், துரதிஷ்டவசமாக இறுதிநேரத்தில் இலங்கை அணி விக்கெட்டுகளை பறிகொடுத்து, 19 ஓவர்கள் நிறைவில் 137 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணிசார்பாக வனிந்து ஹஸரங்க அதிகபட்சமாக 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், பானுக ராஜபக்ஷ மற்றும் தசுன் ஷானக ஆகியோர் தலா 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இங்கிலாந்து அணிசார்பில், கிரிஸ் ஜோர்டன், ஆதில் ரஷீட் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸின் பவர்பிளேயின்போது, இங்கிலாந்து வீரர்கள் சுழல் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி இலங்கை அணிக்கு பெரிய ஒரு அழுத்தத்தைக் கொடுத்தனர்.

இங்கிலாந்து அணி இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி, அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. இலங்கை அணிக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில், அரையிறுதிக்கான வாய்ப்பை பெற அந்தப் போட்டியில் கட்டாய வெற்றியுடன் ஏனைய அணிகளின் முடிவுகளில் தங்கி இருக்க வேண்டிய நிலையில் உள்ளது.

Wed, 11/03/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை