போலந்து–பெலாரஸ் எல்லை பகுதியில் இருந்து குடியேறிகள் வெளியேற்றம்

பதற்றம் தணிவதற்கு வாய்ப்பு

பெலாரஸ் மற்றும் போலந்து எல்லையில் முகாமிட்டிருந்த குடியேறிகளை அருகில் உள்ள களஞ்சியசாலைக்கு அனுப்பியதை எல்லைக் காவல்படையினர் உறுதி செய்துள்ளனர்.

மத்திய கிழக்கை பெரும்பான்மையாகக் கொண்ட ஆயிரக்கணக்கான குடியேறிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் எதிர்பார்ப்புடன் தற்காலிக முகாம்களை அமைத்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் எல்லையில் இருந்து அகற்றப்பட்டிருப்பது பெலாரஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான பதற்றத்தை தணிக்க உதவும்.

ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைகளுக்கு பழிதீர்க்கும் வகையில் குடியேறிகளை எல்லைக்கு அனுப்புவதாக பெலாரஸ் மீது ஐரோப்பிய ஒன்றியம் சுமத்தும் குற்றச்சாட்டை பெலாரஸ் மறுத்து வருகிறது.

இதேவேளை 400க்கும் அதிகமான ஈராக்கியர்களை ஈராக் அரசு பெலாரஸில் இருந்து விமானம் ஒன்றின் மூலம் கடந்த வியாழக்கிழமை சொந்த நாட்டுக்கு திரும்ப அழைத்துக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எல்லையை கடந்து போலந்தை அடைய எட்டு தடவைகள் முயற்சித்ததாக அந்த விமானத்தில் சென்ற ஈராக்கியர் ஒருவர் நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். இதில் ஒரு முயற்சியில் அவர் வெற்றிபெற்றபோதும் போலந்து படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இந்நிலையில் எல்லையில் இருந்து அகற்றப்பட்டவர்கள் சில நூறு மீற்றருக்கு அப்பால் இருக்கும் ஏற்பாட்டியல் கிடங்கு ஒன்றுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக போலந்து எல்லை காவல் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை இவர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை எல்லைக்கு புதிதாக குடியேறிகளின் வருகை இடம்பெற்றுள்ளது.

எல்லைப் பகுதி வெறிச்சோடி இருக்கும் படங்கள் அங்கிருந்து வெளியாகியுள்ளன.

பெலாரஸ் மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த மாற்றம் தற்போதைய நிலையை தணிக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

இந்த வார ஆரம்பத்தில் போலந்து படையினர் தஞ்சக்கோரிக்கையாளர்கள் மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் தண்ணீர் பீச்சியடித்தது பதற்ற சூழலை அதிகரித்தது. குடியேறிகள் எல்லையை கடக்க முயன்றது மற்றும் பொருட்களை எறிந்து தாக்கியதில் போலந்து வீரர்கள் பலர் காயமடைந்தனர்.

பெலாரஸுடனான போலந்து எல்லையில் படையினரை அதிகரிப்பதற்கு உதவியாக சுமார் 150 பிரிட்டன் படையினரை அனுப்பவிருப்பதாக பிரிட்டன் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

பெலாரஸின் மேற்கு எல்லையில் கடந்த பல மாதங்களாக ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என கூடியுள்ளர். இதில் பெரும்பாலானவர்கள் விமானங்கள் மூலம் வந்த நிலையில் மத்திய கிழக்கு மற்றும் பெலாரஸுக்கு இடையிலான விமானப் பயணங்கள் குறைக்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு குடியேறிகள் நுழைவதை தடுப்பதற்கு போலந்துக்கு அந்த அமைப்பு ஆதரவு அளிக்கிறது.

2000 குடியேறிகளை ஏற்கும்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பெலாரஸ் கோரிக்கை விடுத்தபோதும் ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு அதனை நிராரித்துள்ளன.

கடந்த ஆண்டு இடம்பெற்ற கடும் விமர்சனத்திற்கு உள்ளான பெலாரஸ் ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டில் நீண்டகால தலைவர் அலெக்சாண்டர் லுகசென்கோ வெற்றி பெற்றதாக அறிவித்தது மற்றும் அந்த நாடு எதிர்க்கட்சினரின் குரலை ஒடுக்க முயல்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளால், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெலாரஸ் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 11/20/2021 - 08:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை