மாணிக்கக்கல் வர்த்தக துறையிலுள்ள குறைபாடுகளுக்கு விரைவில் தீர்வு

நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் துறைகளில் மாணிக்கக் கல் வர்த்தகம் பிரதான பங்கை வகிக்கிறது. இத் துறையில் உள்ள குறைபாடுளை நிவர்த்திசெய்வதில் இன்றைய அரசாங்கம் கூடிய கரிசனை காட்டி வருவதோடு இத்துறையில் ஈடுபடுவோருக்கும் வரிச் சலுகைகளையும் வழங்கியுள்ளது என இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

சீனன்கோட்டை இரத்தினக் கல் மற்றும் வர்த்தக ஆபரண சங்க புதிய காரியாலயத்தை சீனன்கோட்டை ஜெம் டவர் கட்டிடத் தொகுதியில் திறந்துவைத்த பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகியோரின் விசேட அழைப்பில் பேருவளைக்கு வருகை தந்த அமைச்சருக்கு சீனன்கோட்டை மாணிக்க வர்த்தக சங்க உறுப்பினர்களால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் அலுவலகம் சீனன்கோட்டை ஜெம் டவர் (China Fort Gem Tower) கட்டிடத் தொகுதியில் அமையவுள்ளது. அதன் மூலம் இப்பிரதேச இரத்தினக்கல் வர்த்தகர்கள் கூடிய சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இரத்தினக்கல் வர்த்தகர்களின் பிரச்சினைகளை என்னால் முடியுமானளவு தீர்த்து வைப்பேன். பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஊடாக பிரச்சினைகளை முன்வையுங்கள் அதற்கான தீர்வை நான் பெற்றுத் தருவேன்.

கடந்த இரு தேர்தல்களிலும் பேருவளை வாழ் மக்கள் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக மகத்தான பங்களிப்பினை வழங்கினார்கள். எதிர்காலத்திலும் இந்த பங்களிப்பை நாம் எதிர்பார்க்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீலின் கரங்களைப் பலப்படுத்தி அவர் மூலமாக அரசாங்கத்தின் மூலம் அதிக சேவைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

சீனன்கோட்டை பள்ளிச்சங்கத்தலைவர் முக்தார் ஹாஜியார், பேருவளை நகர பிதா மஸாஹிம் மொஹமட், இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்க முன்னாள் தலைவர் கலாநிதி எம். இஸட்.எம். நிஸார், சீனன் கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளர் எம்.எம்.எம். சிஹாப் ஹாஜியார் உட்பட உறுப்பினர்கள், சீனன்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்க செயலாளர் லியாகத் ரஸ்வி, இரத்தினக்கல் வர்த்தகர்களான முஸ்லிம் ஸலாஹூதீன், புன்சிறி தென்னகோன், அஹ்ஸர் ஸவாஹிர் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சீனன்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்கத்தின் அனுசரணையுடன் இரத்தினக்கல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அதிகார சபையினால் அல்ஹூமைஸரா தேசிய பாடசாலையில் நடாத்தப்பட்ட இரத்தினக்கல் சூடேற்றல் பயிற்சியைப் பூர்த்தி செய்த 50 பேருக்கு இதன்போது அமைச்சரினால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இராஜாங்க அமைச்சர் மாணிக்க வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறும் பத்தை இரத்தினக்கல் வர்த்தக சந்தைக்கும் விஜயம் செய்ததோடு உள்நாட்டு, வெளிநாட்டு வியாபாரிகளுடனும் கலந்துரையாடினார்.

பேருவளை விசேட நிருபர்

Mon, 11/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை