கூட்டுப் பொறுப்பிலிருந்து விலகி சிலரது செயற்பாடு

நாடு தொடர்பில் சர்வதேசத்தில் நம்பிக்கை பாதிக்கப்படும்

SLPP ஊடக மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் G.L. பீரிஸ் தெரிவிப்பு

அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்பைத் தவறி சில தரப்பினர் செயற்படுவதால் இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் நம்பிக்கை பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் ஒரே கொள்கையே காணப்படவேண்டும். தரப்புகளுக்கிடையில் பல்வேறு கருத்துக்கள் காணப்பட்டாலும் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளக பேச்சுவார்த்தை மூலம் ஒரே கொள்கைக்கு வரவேண்டியது அவசியமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதேஅவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது நாட்டில் கூட்டணி அரசாங்கமே உள்ளது. அது மிக பிரபலமான கூட்டணியாகும். பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கமாக அது திகழ்கின்றது. கூட்டணி அரசாங்கத்தின் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது இயற்கையே. அத்தகைய கட்சிகளுக்கு வெவ்வேறு கொள்கைகளும் தூரநோக்கும் இருப்பது இயல்பே. அனைத்து விடயங்கள் தொடர்பிலும் இணக்கப்பாடு காண முடியாத நிலை காணப்படலாம். எனினும் ஜனநாயகத்தின் அவசியம் கருதி ஒரே கொள்கைக்கு வரவேண்டியது அவசியமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் நாம் பிரிட்டனுடன் இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அதன்மூலம் எமது நாட்டுக்கு பாரிய முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. முதலீடுகள் மட்டுமன்றி வர்த்தக ரீதியாகவும் ஏற்றுமதி ரீதியாகவும் இரண்டு நாடுகளுக்குமிடையிலும் விரிவான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதேவேளை பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள உரக் கப்பல் தொடர்பில் இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் எந்த பாதிப்புமின்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு வர்த்தக தொடர்புகளின் போதும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதுண்டு. இதனை வித்தியாசமான தோற்றத்தோடு சிலர் சித்தரித்து வேறு அர்த்தத்தை புகுத்தப் பார்க்கின்றனர். எவ்வாறெனினும் இது இரு நாடுகளின் இராஜதந்திர நடவடிக்கைகளில் எத்தகைய நெருக்கடியையும் ஏற்படுத்தாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 11/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை