சூடானின் பதவி கவிழ்க்கப்பட்ட பிரதமர் பதவிக்குத் திரும்பினார்

சூடானில் கடந்த மாதம் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியில் பதவி கவிழ்க்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பிரதமர் அப்தல்லா ஹம்தொக் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

இராணுவம், சிவில் தலைவர்கள் மற்றும் முன்னாள் கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையே எட்டப்பட்ட புதிய உடன்படிக்கையின் ஓர் அங்கமாக அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக மத்தியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி திடீர் அவசர நிலையை அறிவித்த இராணுவ ஜெனரல், சிவில் தலைமையையும் பதவியில் இருந்து அகற்றினார்.

இதனால் அந்நாட்டில் இடம்பெற்று வரும் பாரிய ஆர்ப்பாட்டங்களில் பலரும் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை உடன்்பாடு ஒன்று எட்டப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை கைச்சாத்திடப்பட்டதாக சூடான் உம்மா கட்சி தலைவர் பதல்லா புர்மா நாசில் உறுதி செய்துள்ளார்.

இதன்படி தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு பிரதமர் மீண்டும் தமது பதவிக்கு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை நோக்கி சூடானின் நிலைமாற்று அரசாங்க ஆட்சி மீண்டும் நிலைநிறுத்தப்படவுள்ளது.

சூடானில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் பதவி கவிக்கப்பட்ட பின் 2019 ஓகஸ்ட் மாதம் தொடக்கம் அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டில் சூடான் இராணுவம் மற்றும் சிவில் தலைவர்கள் ஆட்சியில் இருந்தபோதும் இரு தரப்புக்கும் இடையே முறுகல் அதிகரித்திருந்தது. இதனைத் தொடர்ந்தே கடந்த மாதம் இராணுவ சதிப்புரட்சி ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Mon, 11/22/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை