ஐரோப்பாவில் ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே ஆஸ்திரியாவில் முடக்கம்

ஐரோப்பாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கொண்டுவரப்படும் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வரும் நிலையிலும் ஆஸ்திரியாவில் முழுமையான தேசிய முடக்க நிலை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடக்கம் ஆஸ்திரியர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யும்படியும் அத்தியாவசியமற்ற கடைகளை மூடும்படியும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் ஐரோப்பா எங்கும் ஆர்ப்பாட்டங்களை தூண்டியுள்ளது. நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையே மோதல் வெடித்தது.

தடுப்பூசிகள், முகக்கவசம் அணிவது மற்றும் கொவிட் தடுப்பூசி அனுமதிகளை செயல்படுத்துவது போன்ற கட்டுப்பாடுகளை இறுக்காத பட்சத்தில் அடுத்த வசந்தகாலத்தில் அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஐரோப்பாவில் உயிரிழக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பணிப்பாளர் டொக்டர் ஹான்ஸ் குலுௗஜ் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பாவில் முதல் நாடாக ஆஸ்திரியா கொவிட் தடுப்பூசி பெறுவதை கடந்த வாரம் கட்டாயமாக்கியது. இது வரும் பெப்ரவரியில் அமுலுக்கு வரவுள்ளது. அண்டை நாடான ஜெர்மனியில் அவசர சிகிச்சை பிரிவில் நோய்த் தொற்றுக்கு உள்ளானோர் அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற நடவடிக்கையை எடுக்க ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் பெருந்தொற்று ஆரம்பித்தது தொடக்கம் ஆஸ்திரியாவில் நான்காவது முடக்க நிலை கொண்டுவரப்பட்டுள்ளது.

பணிக்குச் செல்வது, உடற்பயிற்சி மற்றும் உணவுக்காக கடைக்கு செல்வது உட்பட அத்தியாவசிய காரணங்கள் தவிர்த்து அனைவரும் வீடுகளில் இருக்கும்படி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முடக்கநிலையை ஒட்டி தலைநகர் வியன்னாவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tue, 11/23/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை