சீரற்ற காலநிலை மேலும் சில நாட்கள் தொடரும்

சில பகுதிகளில் 100 மி.மீ. மழை பதிவு

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் 100மி.மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பெய்யுமென்றும் காற்று, இடி, மின்னலுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பொதுமக்கள் மிக அவதானமாக செற்படவேண்டுமென்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 10 மாவட்டங்களில் 41 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அதுதொடர்பில் தெரிவிக்கையில்,

அனர்த்த நிலையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையிலுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இதுவரை ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாகவும் 1444 குடும்பங்களைச் சேர்ந்த 5790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு 24 மணித்தியாலங்களிலும் அனர்த்தம் தொடர்பான தகவல்களை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்க முடியுமென்றும் அதற்கிணங்க நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நில்வளா கங்கை, ஜின் கங்கை, களு கங்கை மற்றும் மகாவலி கங்கை பிரதேசத்தை அண்டியுள்ள மக்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு அவர் கேட்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Wed, 11/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை