போலந்து எல்லையில் தஞ்சம்கோரிகள் படையெடுப்பு: பெலாரஸுடன் பதற்றம்

ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் நூற்றுக்கணக்கான தஞ்சம்கோரிகள் நுழைய முயலும் நிலையில் தமது பெலாரஸ் நாட்டு எல்லையில் ஆயுத மோதல் ஒன்று ஏற்படும் சாத்தியம் உருவாகி இருப்பதாக போலந்து எச்சரித்துள்ளது.

எல்லையின் முல் வேலியை வெட்டி நூற்றுக்கணக்கானவர்கள் முன்னேற முயற்சிக்கும் நிலையில் அங்கு மேலதிக துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
பெலாரஸ் பிரச்சினையை உருவாக்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அங்கத்துவ நாடான போலந்து குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை பெலாரஸ் நிராகரித்துள்ளது.

கஸ்னிகாவில் பிரதான எல்லை கடவை ஒன்றை மூடுவதாக போலந்து குறிப்பிட்டுள்ளது.
அண்மைய மாதங்களில் பெலாரஸில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய மற்றும் நேட்டோ அங்கத்துவ நாடுகளான போலந்து, லிதுவேனியா மற்றும் லத்விய நாடுகளுக்குள் நுழையும் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் பலரும் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

எல்லைப் பகுதியில் வெப்பநிலை பூஜ்யத்திற்கு குறைவாக பதிவாகும் நிலையில் அண்மைய வாரங்களில் பல குடியேறிகளும் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலான தஞ்சக்கோரிக்கையாளர்கள் இளம் ஆண்கள் என்றபோதும் பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருப்பதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போலந்தின் கிழக்கு எல்லையில் சுமார் 4,000 குடியேற்றவாசிகள் திரண்டிருப்பதாக போலந்து அரசாங்க பேச்சாளர் பியோடர் முல்லர் தெரிவித்துள்ளார். இது ஒரு தருணத்தில் தீவிரம் எடுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அது ஆயுத மோதலாக மாறலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிரான பதில் நடவடிக்கையாக இந்த குடியேறிகளின் படையெடுப்பை பெலாரஸ் தலைவர் தூண்டி இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற தேர்தலின்போது ஆர்ப்பாட்டங்களை முடக்கியது தொடர்பில் பெலாரஸ் தலைவர் லுகசன்கோ மீது தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Wed, 11/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை