தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலையாவர்

வவுனியா மக்கள் சந்திப்பில் ஞானசார தேரர் அறிவிப்பு

 

அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியினால் மக்கள் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நேற்று வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் சட்டத்தரணிகள், மதத்தலைவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தார்கள். செயலணியின் தலைவர் ஞானசார தேரர் ஒருநாடு ஒருசட்டம் தொடர்பில் இங்கு தெளிவுபடுத்தினார்.

வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் செயணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவிக்கையில்,

இந்தக் கலந்துரையாடலில் அரசியல் கைதிகளின் விடுதலை, தொல்பொருள் திணைக்களங்களின் நடவடிக்கை, பௌத்த விகாரரைகளை அமைப்பது, எமது மத வழிபாடுகள் மறுக்கப்படுவது தொடர்பான பிரச்சினை, மாவீரர் தினம் தொடர்பில் எமது உரிமை  கள் மறுக்கப்படுவது தொடர்பான பிரச்சினை தொடர்பில் பேசியிருந்தேன்.

அப்போது அவரிடம் இருந்து வந்த பதிலில் அரசியல் கைதிகள் தொடர்பாக உள்ளே இருப்பவர்கள் தொடர்பில் ஜனாதிபதி சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பேசியுள்ளார். மிக விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டார். இது தொடர்பில் ஜனாதிபதி தன்னிடமும் தெரிவித்ததாகவும் தெரிவித்தார். இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் இருந்துள்ளார்கள். மகாவம்சத்தில் தமிழ் பௌத்த துறவிகள் இருந்தமைக்கான ஆதாரம் உண்டு. தமிழ் மக்களின் வழிபாட்டுக்கான உரிமை மறுக்கப்படும் இடங்களை பார்வையிடுவதாக தெரிவித்தார். குருந்தூர் மலையில் கதிர்காமம் போன்று இரு மதத்தினரும் வழிபடக் கூடிய நிலை வருவதனை தான் விருப்புவதாக தெரிவித்தார். நாம் இணைந்து வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார். மாவீரர் தினம் தொடர்பில் கேட்டிருந்தேன். பல்வேறு காலங்களிலும் மரணித்த மாவீரர்களை நினைவு கூர உரிமை உள்ளது எனத் தெரிவித்தேன். இந்த விடயம் தொடர்பில் தான் முழுமையாக பதில் செல்ல முடியாது எனவும், இருந்தாலும் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக மேற்கொண்ட விடயம் தவறு. அதற்கு அனுமதிக்க முடியாது. உங்களுடைய வலிகள், பிரச்சினைகளை புரிந்திருந்தாலும் இதற்கான பதிலை வழங்கக் கூடிய நிலையில் இல்லை. எங்களுடன் சேர்ந்து இவற்றை மறந்து நீங்கள் பயணிக்க வேண்டும் எனக் கூறினார். இதைவிட பிரச்சினையான பல விடயங்கள் இருக்கின்றன. சாப்பாடு இல்லை, வீடு இல்லை, தண்ணீர் இல்லை இவை பற்றி நாம் பார்ப்போம் எனத் தெரிவித்தார்.

 

(வவுனியா விசேட நிருபர்)

Mon, 11/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை