பாராளுமன்ற அமர்வுகளில் சைகை மொழிக்கு அனுமதி

பெண் MP மார் ஒன்றியம் நன்றி தெரிவிப்பு

நாட்டில் வாழும் கேட்டல் குறைபாடு உள்ள சமூகத்தினருக்கு பாராளுமன்ற அமர்வுகள் சைகை மொழியில் ஒளிபரப்பப்பட வேண்டும் என பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்த பரிந்துரைக்கு சாதகமான பதிலை வழங்கியமை தொடர்பில் சாபாநாயகருக்குத் தமது நன்றியைத் தெரிவிப்பதாக ஒன்றியத்தின் தலைவி வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே குறிப்பிட்டார்.

அண்மையில் (09) பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு நன்றி தெரிவித்தார்.

இதற்கமைய இவ்வருட வரவு-செலவுத்திட்ட விவாதத்தை சைகை மொழியிலும் ஒளிபரப்புவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்வைத்த யோசனைக்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இணக்கம் தெரிவித்திருந்தது. இதன்படி எதிர்வரும் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு-செலவுத்திட்டம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் போதும், வரவு-செலவுத்திட்ட விவாத காலப்பகுதியில் நடைபெறும் நேரடிய ஒளிபரப்பிற்கு சமாந்தரமாக சைகை மொழிக்குத் தனியான கட்டமொன்று வழங்கப்படவுள்ளது.

நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்போது நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்துத் தெரியப்படுத்துவதுடன், குறைபாடுகளுடன் கூடிய நபர்கள் பாராளுமன்றத்துக்கு வருவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை எதிர்வரும் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்க சேவையிலுள்ள இளம் பெற்றோரின் வசதிகளுக்காக சகல அரசாங்க நிறுவனங்களுக்கும் இணைந்ததாக பகல் நேர பராமரிப்பு நிலையங்களை அமைப்பதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதன் ஊடாக அரசாங்க நிறுவனங்களை வினைத்திறன் மிக்கதாகவும் தரம் மிக்கதாகவும் அபிவிருத்தி செய்ய முடியுமென பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

Fri, 11/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை