சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தின் பல பகுதிகளிலும் அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கன்ன உடகலதெனிய பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாயும், 8மற்றும் 14வயதான அவரது இரு மகள்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தந்தை காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கண்டி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 38குடும்பங்களைச் சேர்ந்த 169ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தேசப்பிரிய பண்டார தெரிவித்துள்ளார். தொடர்மழை காரணமாக நேற்று (09 ) மாலை வரை 2வியாபார நிலையங்கள் உட்பட 32இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகாத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 37பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது உறவினர்களின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை உடனடியாக வழங்குமாறு கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்பொழுது, மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக தடைப்பட்ட அனைத்து வீதிகளும் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் தேசப்பிரிய பண்டார மேலும் தெரிவித்தார்.
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் இரண்டு வான்கதவுகள் நேற்றுமுன்தினம் இரவு முதல் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நீர்த்தேக்கத்திற்கு தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
பலாங்கொடை பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக கல்தொட்ட தூவிலிஎல்ல நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் பெருக்கெடுத்துள்ளது. வலேபொட- இம்புல்பே-கலகம- பெலிஹுல்ஓய- ஹோடன்தென்ன- நன்பேரியல் பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக தூவிலி எல்ல நீர்வீழ்ச்சி இவ்வாறு பெருக்கெடுத்துள்ளது.
அதே சமயம் பலாங்கொடை மற்றும் இம்புல்பே பிரதேசங்களிலுள்ள வளவை ஆறு- பெலிஹுல் ஓய ஹிரிகடு வாவி-ரன்முது வாவிகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மாத்தளை மாவட்டத்தில் கடும் மழை காரணமாக சுமார் 70குடும்பங்களைச் சேர்ந்த 300பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பன் கங்க கோரளை பிரதேச சபை பிரிவில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் தெரிவித்துள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் கடும் மழை காரணமாக உக்குவளை, இரத்தோட்டை, அம்பன்கங்க கோரளை, மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை மாத்தளை மாவட்டத்தில் 106அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புவியியலாளர் சமிந்த மொரேகொட தெரிவித்தார். இதேவேளை இரத்தொட்டை உக்குவளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் நேற்று 39குடும்பங்களைச் சேர்ந்த 139பேர் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதேச செயலக பிரிவுகளில் பாதிக்கப்பட்ட 11குடும்பங்களைச் சேர்ந்த 49உறுப்பினர்கள் தற்பொழுது உக்குவளை பிரதேச செயலக பிரிவின் இரத்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு மட்டும் ஏனைய வசதிகள் உக்குவளை பிரதேச செயலாளர் சேமசிங்கவின் பணிப்புரையின் பெயரில் வழங்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நீர்தேக்கங்களான மொரகஹகந்த நீர்த்தேக்கம், நாலந்த நீர்த்தேக்கம் , இப்பம் கட்டுவ நீர்த்தேக்கம், கண்டளம் குளம், தேவஹுவ குளம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் மழையினால் ஹற்றன்- கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹற்றன்- நோட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது.
இரவு பெய்த கடும் மழையினால் ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை ரஞ்சுராவ சந்தபிலிகம பகுதியில் மண்மேடு சரிந்து வீதியில் வீழ்ந்தது.
இதனால் பல மணி நேரம் இவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.
(கேகாலை மாவட்டம்- ஹற்றன் சுழற்சி நிருபர், கண்டி மாவட்டம்-எம்.ஏ.அமீனுல்லா, இரத்தினபுரி மாவட்டம்-பலாங்கொடை தினகரன் நிருபர், மாத்தளை மாவட்டம்-உக்குவளை விசேட, தம்புள்ளை தினகரன், மாத்தளை சுழற்சி நிருபர்கள், நுவரெலியா மாவட்டம்-ஹற்றன் விசேட, நோட்டன் பிரிட்ஜ் நிருபர்கள்)
from tkn