சோமாலியத் தலைநகரில் கார் குண்டு தாக்குதல்: எண்மர் பலி

சோமாலியத் தலைநகர் மொகடிசுவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் நேற்று இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் எட்டுப் பேர் பலியானதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அல் சபாப் ஆயுதக் குழு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

ஐ.நா பாதுகாப்பிற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட டுகுப் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் வாகனத் தொடரணி ஒன்றை இலக்கு வைத்து வெடிபொருட்களை நிரப்பிய வாகனத்தை ஓட்டிவந்த தற்கொலைதாரி வாகனத்தை வெடிக்கச் செய்துள்ளார்.

இதில் 13 மாணவர்கள் உட்பட சுமார் 17 பேர் காயமடைந்துள்ளனர். பரபரப்பான காலை நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இராணுவ பயிற்சியாளர்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக அல் ஷபாப் குறிப்பிட்டுள்ளது.

2011 ஆண்டு வரை தலைநகர் மொகடிசுவை கட்டுபாட்டில் வைத்திருந்த அல் ஷபாப் குழுவை ஆபிரிக்க ஒன்றிய படைகள் துரத்தியது. எனினும் கிராமப்புறங்களை தொடர்ந்தும் தனது கட்டப்பாட்டில் வைத்திருக்கும் அல் ஷபாப் தலைநகரில் அரசு மற்றும் சிவில் இலக்குகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

Fri, 11/26/2021 - 10:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை