ஒமிக்ரோன் திரிபு: இஸ்ரேலை அடுத்து ஜப்பானிலும் எல்லைகளுக்குப் பூட்டு

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

புதிய கொரானா வைரஸ் திரிபுக்கு எதிராக இஸ்ரேலை அடுத்து உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பான் நாட்டு எல்லைகளை முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த திரிபினால் உலகளாவிய அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இரண்டு வருட தொற்றுநோயிலிருந்து புதிய பொருளாதார மறுமலர்ச்சியை அச்சுறுத்தும் வகையில், புதிய தடைகளை கொண்டு வரலாம் என்ற அச்சம் கடந்த வாரம் நீடித்த நிலையில், முதலீட்டாளர்கள் இந்தத் திரிபு பற்றி கூடுதல் விபரங்களுக்கு காத்திருந்ததால் சந்தைகள் சற்று மீண்டன.

முந்தைய திரிபுகளை விடவும் வேகமாக தொற்றக்கூடியது என்று சந்தேகிக்கப்படும், ஒமிக்ரோன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரிபு, முதலில் தென்னாபிக்காவில் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டது. அது தற்போது அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பொட்ஸ்வானா, பிரிட்டன், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஹொங்கொங், இஸ்ரேல், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து நாடுகளில் பரவியுள்ளது.

ஒமிக்ரோன் திரிபு சர்வதேச அளவில் பரவி சில இடங்களில் “தீவிர விளைவுகளை” ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு 194 அங்கத்துவ நாடுகளையும் எச்சரித்துள்ளது.

“ஒமிக்ரோன் புதிய திரிபு தொடர்பான ஒட்டுமொத்த உலகளாவிய அச்சுறுத்தல் மிகவும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது” என்று எச்சரித்திருக்கும் உலக சுகாதார அமைப்பு, இந்த திரிபின் அளவின் தீவிரத்தன்மையை மதிப்பிட பல வாரங்கள் எடுத்துக்கொள்ளும் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜப்பான் இன்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் வெளிநாட்டினருக்கு எல்லைகளை மூடுவதாக பிரதமர் பியுமியோ கிசிடா அறிவித்தார். மிகவும் எச்சரிக்கையாக இருப்பதற்காக விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இது ஒமிக்ரோன் திரிபு பற்றி தெளிவான விபரம் கிடைக்கப்பெறும் வரையில் பாதுகாப்பிற்காக நாம் எடுத்துள்ள தற்காலிக நடவடிக்கையாகும்” என்றும் கிசிடா செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

எனினும் இந்தக் கட்டுப்பாடு எத்தனை காலம் நீடிக்கும் என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. குறிப்பிடத்தக்க நாடுகளில் இருந்து திரும்பும் ஜப்பானியர்கள் தனிமைப்படுத்தலுக்கு முகம்கொடுப்பார்கள் என்று பிரதமர் கூறினார்.

ஜப்பானில் ஒமிக்ரோன் திரிபு அடையாளம் காணப்படாதபோதும், நமீபியாவில் இருந்து வந்த ஒருவரிடம் கொவிட்-19 உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஒமிக்ரோன் திரிபு ஏற்பட்டிருக்கிறதா என்பது பற்றி சோதனை நடத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் சிங்கியுக்கி கோடோ தெரிவித்தார்.

இஸ்ரேலில் வெளிநாட்டினருக்கான தடை கடந்த ஞாயிறு நள்ளிரவுடன் அமுலுக்கு வந்தது. புதிய திரிபுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்பு தொலைபேசி கண்காணிப்பு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தப்போவதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

தேர்ச்சிபெற்ற தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 1 ஆம் திகதி எல்லையை திறக்க அவுஸ்திரேலிய திட்டமிட்டிருக்கும் நிலை அந்த திட்டம் பற்றி மீளாய்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் முதலாவது ஒமிக்ரோன் திரிபு அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒமிக்ரோன் திரிபின் அறிகுறிகள் இதுவரையில் லேசானதாக வீட்டிலேயே சிகிச்சை அளிக்கக் கூடியதாக இருப்பதாக தென்னாபிரிக்க மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டார்.

அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய குழுக்களுக்கு தடுப்பூசி வழங்குவதை வேகப்படுத்தும்படியும் அத்தியாவசிய சுகாதார சேவைகளின் முயற்சிகளை உறுதி செய்யும்படியும் உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகளை சரிசெய்வதற்கான அச்சுறுத்தல் அடிப்படையிலான அணுகுமுறையை கையாளும்படியும் உறுப்பு நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுவரை ஒமிக்ரோன் திரிபால் யாரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படவில்லை. எனினும், தடுப்பூசியின் செயல்திறன் மீதான அதன் தாக்கத்தை ஆராய வேண்டும் என்று அது குறிப்பிட்டது.

ஒமிக்ரோன் திரிபு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அது சுகாதார அமைப்புகளைப் பெருமளவு பாதிக்கலாம் என அந்த அமைப்பு கூறியது.

அதன் தாக்கம், தடுப்பூசி போடாதோர் அதிகமுள்ள நாடுகளில் இன்னும் மேலோங்கி இருக்கக்கூடும் என அது எச்சரித்தது.

நவம்பர் 29 திங்கட்கிழமை தொடக்கம் நாட்டுக்குள் வரும் அனைத்து சர்வதேச பயணிகள் விமானங்களுக்கும் இரண்டு வாரங்கள் தடை விதிக்கப்படுவதாக மொரோக்கோ அறிவித்துள்ளது.

கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற சில மத்திய கிழக்கு நாடுகளுடனான தடுப்பூசி வழங்கப்பட்ட பயணப் பாதைத் திட்டத்தை சிங்கப்பூர் ஒத்திவைத்துள்ளது.

நாளை புதன்ழமை தொடக்கம் அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவர் மீது கொவிட்-19 சோதனையை விமானநிலையங்களில் மேற்கொள்ள இந்தியா உத்தரவிட்டுள்ளது.

Tue, 11/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை