சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கான சேவை

SLPP அர்ப்பணிப்புடன் செயற்படும் -

சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கான சேவையை சிறந்த முறையில் தொடர பொதுஜன பெரமுன அர்ப்பணிப்புடன் செயற்படும். ஐந்து வருட காலத்திற்குள் தேசிய தேர்தல்களில் வெற்றி பெற்ற பொதுஜன பெரமுன நிலைத்து நிற்கும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நிதியமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ தலைமையில் இன்று கொழும்பிலுள்ள தாமரை தடாக அரங்கில் விசேட நிகழ்வு நடைபெற்றது. ஐந்தாண்டு நிறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரால் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நாட்டு மக்களின் நிலைப்பாடு மாற்றமடைந்தது. நாட்டுக்காக காணப்பட்ட எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுவதாகவும், மக்களுக்கான அரசாங்கமென குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் எதிர்பார்ப்புகளுக்கு முரனாக செயற்பட்டது.

அரசியலின் இரண்டாம் கட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டுமென மக்கள் எதிர்பார்த்தனர். அரசியலில் தனித்துவிடப்பட்ட மக்களை ஒன்றுப்படுத்துவதற்கான தேவை காணப்பட்டது.

மக்களின் எதிர்பார்ப்புக்களை மையப்படுத்தி நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் திகதி 'ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன' என்ற புதிய அரசியல் கட்சியை ஸ்தாபித்தார். மக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்த அரசாங்கத்திற்கு மொட்டு சின்னத்தில் உதயமான பொதுஜன பெரமுனவின் எழுச்சி பெரும் சவாலாக காணப்பட்டது. பொதுஜன பெரமுன கட்சியை நாட்டு மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது.

கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 16 மாத காலத்திற்குள் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் 71 சதவீத வெற்றியை பெறமுடிந்தமை சாதாரண வெற்றியல்ல. குறுகிய காலத்தில அதிவிசேட வெற்றியை கைப்பற்றிய கட்சியாக பொதுஜன பெரமுன பெயர் பெற்றது. அத்துடன் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன 69 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் ஆதரவை பெற்று வெற்றிப் பெற்றது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இரண்டாவது வெற்றியை பொதுஜன பெரமுன மீண்டும் உறுதிப்படுத்தியது.

மக்களை மையப்படுத்திய செயற்திட்டங்கள், எதிர்கால, சுபீட்மான கொள்கைத்திட்டம் என்று மக்கள் ஏற்கும் திட்டங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட்டதால் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெற்றது.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் உலகளாவிய மட்டத்தில் தாக்கம் செலுத்தியதால் பொருளாதாரம் பாதிகப்பட்டது.பாரிய சவால்களுக்கு மத்தியில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதால் கொவிட் தாக்கத்தை குறுகிய காலத்திற்குள் கட்டுப்படுத்த முடிந்தது. பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் முன்னேற்றுவது அரசாங்கத்தின் முன் உள்ள பிரதான சவாலாகும்.

இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் தான் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக பதவியேற்றார். சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கான சேவையை சிறந்த முறையில் தொடர பொதுஜன பெரமுன அர்ப்பணிப்புடன் செயற்படும். ஐந்து வருட காலத்திற்குள் தேசிய தேர்தல்களில் வெற்றிப் பெற்ற பொதுஜன பெரமுன நிலைத்து நிற்கும்.

 

Wed, 11/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை