பாரம்பரிய வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்டதாக இவ்வருட 'பட்ஜட்'

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜெயசுந்தர தெரிவிப்பு

-பாரம்பரிய வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட புதிய தொலைநோக்கு மற்றும் வேலைத்திட்டம் அடங்கிய வரவு செலவுத் திட்டமொன்று இம்முறை முன்வைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜெயசுந்தர தெரிவித்தார்.

பசுமைப் பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் நிர்வாகம் ஆகிய துறைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும், "சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைவாக செயற்படுவதன் மூலம் நாட்டின் வருமானத்தை உயர்த்துவதுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மெய்நிகர் காணொளி தொழில்நுட்பம் ஊடாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்கள்.

“எதிர்கால வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை” எனும் தொனிப்பொருளில் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டிற்கு வருவாயை ஈட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும். பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவை அதிகரிக்கக் கூடிய வருமானக் கொள்கை இம்முறை பட்ஜெட்டில் சேர்க்கப்படும். கிராமிய விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி செயலாளர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூர் வர்த்தகர்கள், புதிய முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய நாடு உருவாக்கப்பட வேண்டும் என்றும் நாட்டின் வளங்களுக்கு மேலதிகமாக புதிய முதலீட்டு வாய்ப்புகள் நாட்டிற்கு உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

நாடு வழமை நிலைக்கு திரும்புவதோடு புதிய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார். வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை தொடர்ந்தும் அதிகரிப்பது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல என்றும், அந்த இடைவெளியைக் குறைப்பதற்கு தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்றும் நிதிச் செயலாளர் குறிப்பிட்டார்.(பா)

Wed, 11/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை