உய்குர் மக்களுக்கு ஆதரவாக லண்டன் நகரில் ஆர்ப்பாட்டம்

சீனா, உய்குர் முஸ்லிம்களை நடாத்தும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்நாட்டின் சின்ஜியாங் மாகாணத்திலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு கோரியும் பிரித்தானியாவின் லண்டனிலுள்ள சீனத் தூதரத்திற்கும் மன்செஸ்டரிலுள்ள கொன்சியூலர் அலுவலகத்திற்கும் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளதோடு உய்குர் முஸ்லிம்களுக்கான தங்களது ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளனர். 'சீனாவே இன அழிப்பை நிறுத்து' என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பியுள்ளனர். தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான அப்ஸல் கான், “உய்குர் மக்களை சீனா நடாத்தும் விதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவே நாங்கள் இங்கு கூடியுள்ளோம். அந்த மக்கள் எதிர்கொண்டுள்ள நிலைமை பெரிதும் கவலையளிப்பதாக உள்ளது. அவை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை அல்ல. இந்நிலைமையை சீனா முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்றார்.

உய்குர் முஸ்லிம்களை வெகுஜன தடுப்பு முகாம்களுக்கு அனுப்புதல், அவர்களது மத நடவடிக்கைகளில் தலையிடுதல், உய்குர் சமூகத்தின் உறுப்பினர்களை சில வகையான வலுக்கட்டாய மறு கல்வி நடவடிக்கைக்கு அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளுக்காக உலகளாவிய ரீதியில் சீனாவுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Mon, 11/22/2021 - 09:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை