இரண்டு வார காலத்தினுள் சீமெந்து பிரச்சினைக்கு தீர்வு

ஏற்க முடியாத விலை அதிகரிப்புக்கு முடிவு காணப்படும்

சந்தையில் சீமெந்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டுக்கு இன்னும் இரு வார காலத்திற்குள் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ள நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அத்தியாவசிய பொருட்களின் விலையை வர்த்தகர்கள் நியாயமற்ற வகையில் அதிகரிப்பதற்கு இடமளிக்க முடியாது எனவும் நுகர்வோரும், வர்த்தகர்களும் பாதிப்படையாத வகையில் புதிய செயற்திட்ட ம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

தேசிய நிர்மாணிப்புத்துறை சங்கத்தினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது நிதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த ஒக்டோபர் மாதம் அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து சீமெந்துக்கான விலை அதிகரிக்கப்பட்டது. விலை அதிகரிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் தற்போது மீண்டும் 50 கிலோகிராம் சீமெந்தின் விற்பனை விலை 177 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.

விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதும் சந்தையில் சீமெந்துக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால் நிர்மாணிப்பு தொழிற்துறையினர் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என நிர்மாணிப்புத்துறை சங்கத்தினர் நிதியமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

சீமெந்து இறக்குமதியின் போது பல சிக்கல்களை வர்த்தகர்கள் எதிர்க் கொண்டுள்ளார்கள்.அவர்களுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை இடம் பெற்றது. சீமெந்து பொதி செய்யும் உறையினை நிவாரண விலைக்கு வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.

இதன்போது, இன்னும் சந்தையில் சீமெந்துக்கான தட்டுப்பாடு காணப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இன்னும் இரண்டு வார காலத்திற்குள் அதற்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் சீமெந்தின் விற்பனை விலை 177 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து பெக்கெட்டின் விலை 1,275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tue, 11/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை