சீரற்ற காலநிலையால் இதுவரை ஐவர் மரணம்

ஒருவரை காணவில்லை: இருவருக்கு காயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ​நேற்றுவரை ஐவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்தனர்.

அத்தோடு ஒருவர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ  மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அருகில் காணப்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழையுடனான காலநிலை நிலவியது. இந்த நிலையில், சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களில் 1136 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 364 பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த அனர்த்தத்தினால் 5 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் இருவர் வெள்ளத்தில் சிக்கியும் இருவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 12 வீடுகள் முழுமையாகவும், 630 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Sat, 11/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை