அரசிலிருந்து சு.க.விலகினாலும் அரசு ஒருபோதும் வீழ்ந்து விடாது

சுற்றுலாத்துறை அமைச்சர்   பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு விலகினாலும் அரசாங்கம் ஒருபோதும் வீழ்ச்சியடையாதென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தேவையற்ற விமர்சனங்களை முன்னெடுப்பதற்கு முன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சுதந்திரக் கட்சியினர் கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட்டார்கள் என்பதை மறந்து செயற்படக்கூட தெனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்றுள்ள நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையே இக்காலங்களில் நிலவிவரும் கருத்துமோதல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்ற அவசியம் கிடையாது.

புதிய அரசியலமைப்பு திருத்தத்தை முன்வைத்தல் போன்ற அரசியலமைப்பு தொடர்பான விசேட விடயங்களுக்கு மட்டுமே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படலாம்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ளமைக்கு காரணமாக அமைந்துள்ளதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறினாலும் அரசாங்கம் ஒருபோதும் வீழ்ச்சியடையாது.

ஊடகங்களிலும் பல்வேறு இடங்களிலும் பிரசாரங்களை கடுமையாக முன்னெடுத்து வருவதை விடுத்து தேவையானால் எவரும் அரசாங்கத்திலிருந்து வெளியேற முடியும்.

எவ்வாறெனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நாடும் நாட்டின் தேசிய பாதுகாப்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மோசமான செயற்பாடுகளினாலேயே சீரழிந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 11/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை