அரையிறுதிப் போட்டி‍களில் இங்கிலாந்து - நியூசிலாந்து; பாகிஸ்தான்- அவுஸ்திரேலியா பலப்பரீட்சை

7 ஆவது 20க்கு 20 உலக கிண்ண போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் நாளை 10ம் திகதி மோதவுள்ளதுடன், பாகிஸ்தான் - அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள இரண்டாவது அரையிறுதிப்போட்டி, நாளை மறுதினம் 11ம் திகதி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான தங்களுடைய இறுதி சுப்பர் 12 போட்டியில், 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்த பாகிஸ்தான் அணி, குழு இரண்டில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று, முதலிடத்தை பிடித்துக்கொண்டது.

சுப்பர் 12 சுற்றின் குழு ஒன்றுக்கான இம் முதல் போட்டியில், நியூசிலாந்து அணியானது, ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தங்களுடைய அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. இதனால், இந்திய அணி தங்களுடைய அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்திருந்தது.

இந்தநிலையில், எந்த அணி குழு ஒன்றில் முதலிடத்தை பிடிக்கும் என்ற நிலையில், ஸ்கொட்லாந்து அணியை இலகுவாக வீழ்த்திய பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து, அரையிறுதியில், அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், சொஹைப் மலிக்கின் 18 பந்துகளில் பெறப்பட்ட அரைச்சதம், பாபர் அஷாமின் அரைச்சதம் மற்றும் மொஹமட் ஹபீஸின் பங்களிப்புடன் 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இன்னிங்ஸை நிறைவுசெய்த சொஹைப் மலிக் 18 பந்துகளில், 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், பாபர் அஷாம் 47 பந்துகளில் 66 ஓட்டங்களை பெற்றார். மத்தியவரிசையில் மொஹமட் ஹபீஸ் 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில், கிரிஸ் கிரீவ்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஸ்கொட்லாந்து அணிசார்பாக, அதிகபட்சமாக ரிச்சி பெரிங்டன் அரைச்சதம் கடந்து 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சதாப் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் அடிப்படையில் இந்த வெற்றியுடன், குழு இரண்டின் புள்ளிப்பட்டியலில், முதலிடத்தை பிடித்துக்கொண்ட பாகிஸ்தான் அணி, குழு ஒன்றில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்த அவுஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ளதுடன், குழு ஒன்றின் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து அணியானது, குழு இரண்டின், இரண்டாவது இடத்தை பிடித்துள்ள நியூசிலாந்து அணியை எதிர்த்தாடவுள்ளது.

Tue, 11/09/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை