அதிகார பகிர்வே இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு

அதிகார பகிர்வே தேசிய இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இணைந்த வடக்கு கிழக்கில் உயர்ந்தபட்ச சமஷ்டி, அதிகார கட்டமைப்பு ஒன்றின் கீழே தீர்வு சாத்தியமாகும். யாழில் நேற்று நடைபெற்ற தமிழ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட வரைபு ஆவணத்திலேயே விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனவே சமஷ்டி கட்டமைப்பின் கீழ் இத்தகைய ஒரு நிலையான தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா அனைத்து விதமான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

குறுகிய அரசியல் இலாபம், தூர நோக்கற்ற சிந்தனை மற்றும் கடும் பௌத்த இனவாத சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் இன்று ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனை கவனத்தில் கொண்டு தமிழ் பேசும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதைத் தடுப்பதற்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் பொருளாதார மற்றும் கலாசார அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் தார்மீக ரீதியான கடமையினையும் பொறுப்பினையும் அவர் சுட்டிக்காட்டி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

 

Mon, 11/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை