குற்றப்பத்திரம் மீளப்பெற்ற காரணங்களை விளக்க சட்ட மாஅதிபருக்கு அனுமதி

மேன் முறையீட்டு  நீதிமன்றம் அறிவிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மீளப்பெறுவதற்கான காரணங்களை விளக்கி இரகசிய அறிக்கையை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

 

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை மீளப்பெற்றமை தொடர்பில் தொகுக்கப்பட்ட இரகசிய அறிக்கையை தமது திணைக்களம் வைத்துள்ளதாக தெரிவித்ததோடு, அதனை இரகசிய அறிக்கையாக தாக்கல் செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியையும் கோரினார்.

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா மற்றும் நீதியரசர் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த அறிக்கையை நவம்பர் 2ஆம் திகதி (இன்று) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Tue, 11/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை