முச்சக்கரவண்டி மரத்துடன் மோதி விபத்து; இளம் யுவதி பலி

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்குனவில் பகுதியில் ஞாயிறு இரவு (28)  முச்சக்கர வண்டி ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் விலபத்த பகுதியைச் சேர்ந்த எம்.எம்.அஞ்சலி ருவந்திகா பிமந்தி (வயது 24) எனும் இளம் யுவதியே உயிரிழந்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். கீரியங்கள்ளி - ஆண்டிகம பிரதான வீதியின் அங்குனவில் பிரதேசத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வீதியோரத்தில் இருந்த வேப்பமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, குறித்த முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பயணம் செய்துள்ளதுடன், அவர்களில் 24வயதுடைய இளம் யுவதி விபத்து நடத்த சம்பவ இடத்திலேயே மரணமாகியுள்ளார்.

அத்துடன், முச்சக்கர வண்டி சாரதி மற்றும்  பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு பெண் காயமடைந்த நிலையில் முந்தல் மாவட்ட வைத்தியசாலையிலும், சிலாபம் பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் சடலம் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் முச்சக்கர வண்டியில் நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்திற்கு முகம் கொடுத்துள்ளனர். இவ்விபத்து சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

 

Tue, 11/30/2021 - 10:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை