இந்தியாவிலிருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையருக்கு கௌரவமான வாழ்வு

அவர்களது பூர்வீக இடங்களில் வாழ ஏற்பாடுகள் செய்யப்படும்

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டுக்கு அழைத்து வருதல் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைள் தொடர்பில், சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று (26) நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே இவ் விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்து சென்று இந்தியாவில் தங்கியிருக்கின்றவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக பிரதி உயர்ஸ்தானிகரினால் கடற்றொழில் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்படவுள்ள இலங்கையர்களுக்கு பயண ஏற்பாடுகளை இலவசமாக வழங்குவதற்கும் பொருட்களை எற்றிவருவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த பிரதி உயர் ஸ்தானிகர், அழைத்து வரப்படுகின்றவர்களின் செலவுகளுக்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் முதல் கட்டமாக தலா 30,000 ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், அடுத்த வருடம் சுமார் 7,000 குடும்பங்களை அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அழைத்து வரப்படுகின்றவர்களின் பூர்வீகப் பிரதேசங்களில் சர்வதேச, தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இம் முயற்சிகளை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டுக்கு வருவதற்கு விரும்புகின்ற இலங்கையர், தங்களுடைய பூர்வீக இடங்களில் மீள்குடியேறி இயல்பு வாழ்கையை தொடர்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்ததுடன் இவ் விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷமற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷஆகியோரின் பூரணமான ஒத்துழைப்பத் தனக்கு கிடைக்குமெனவும் தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவின் சிறப்பு முகாம்கங்களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த மாதம் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டபோது சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினரின் உறவினர்கள் தன்னை சந்தித்தமையை சுட்டிக்காட்டியதுடன், அதுதொடர்பாக ஏற்கனவே இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.

 

 

Sat, 11/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை