அரசை எதிர்த்து நின்று எதனையும் சாதிக்க முடியாது

இராஜதந்திர ரீதியில் காய்களை நகர்த்த வேண்டும்

அரசை எதிர்த்து நின்று எதனையும் சாதிக்க முடியாது. சிறுபான்மை சமூகமாக உள்ள நாம் அரசுடன் இராஜதந்திர ரீதியில் காய்களை நகர்த்தி எமது தேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

சஹ்ரானினால் நிகழ்த்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் காரணமாக முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நல்லாட்சி காலத்தில் தான் இந்த தாக்குதல் இடம்பெற்றது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. சஹ்ரானை பற்றி நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் நல்லாட்சி அரசில் யாருமே அதனை கவனத்தில் கொள்ளவில்லை. அதன் விளைவுகளையே இன்று அனுபவிக்கிறோம் என்பதை முஸ்லிம் சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டும். திகன பிரச்சினையும் கூட நல்லாட்சி அரசின் காலத்தில் தான் நடந்தது.

20 ஆம் திருத்தத்தை நாம் ஆதரவளித்த நாளில் இருந்து எங்களை விமர்சிக்கவென்றே சில கூட்டங்கள் செயற்பட்டு வருகின்றன. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளை எவ்வாறு வெற்றிகொள்ள வேண்டும் என்றோ எவ்வாறு ஜனநாயக ரீதியிலே ராஜதந்திரமாக காய்நகர்த்த வேண்டும் என்றோ புரிந்துகொள்ளாமலும் நாட்டின் நிலைமைகளை உணராமலும் வெளியில் இருந்து வெறுமனே பேசிக்கொண்டு இருப்பதால் எந்த நன்மையும் அடைய முடியாது. அரசை எதிர்த்து நிற்பதால் நாம் எதனையும் சாதித்துவிட முடியாது. நாட்டிலே சிறுபான்மை சமூகமாக உள்ள நாம் அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்தி எமது விடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் எந்த இலாப நோக்கத்திற்காகவும் இந்த அரசாங்கத்துடன் இணையவில்லை, அரசிடமிருந்து எமக்கு 5 சதமும் தேவையில்லை, எமது சமூகத்திற்காக இந்த எம்.பி பதவியை கூட தூக்கி வீச நாம் தயாராக இருக்கிறோம்.

நாம் அரசுடன் இணைந்து செயற்படுவதால் தான், எமது சமூகம் சார்ந்த பல விடயங்களை பேசித் தீர்க்க முடிந்துள்ளது. அரசை விமர்சிப்பதால் மாத்திரம் எதனையும் சாதித்துவிட முடியாது.நாம் அரசு டன் இணைந்து செயற்படுகின்ற காரணத்தினால் தான், எமது சமூகம் சார்ந்த பல விடயங்களை பேசித் தீர்க்க முடிந்தது. நாம் அரசு டன் இணைந்து செயற்படுகின்ற காரணத்தினால் தான், எமது சமூகம் சார்ந்த பல விடயங்களை பேசக்கூடியதாக உள்ளது.

எமது சமூகம் முகங்கொடுக்கும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றோம். பல இடங்களில் காணிப் பிரச்சினைகள் உள்ளன.அது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்துடன் கைகோர்த்து எமது தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

 

Mon, 11/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை