அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பேரணி மீது வாகனம் மோதி ஐவர் பலி: பலர் காயம்

அமெரிக்காவின் விஸ்கோசின் மாநிலத்தில் கிறிஸ்மஸ் பேரணி ஒன்றின் மீது வேகமாக வந்த வாகனம் மோதிச் சென்றதில் ஐவர் கொல்லப்பட்டதோடு மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

வோகேசா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் வாகனம் வேகமாக கூட்டத்தினர் மீது மோதிக் கொண்டு செல்லும் கட்சி பதியப்பட்ட வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. சிறுவர்கள் உட்பட பல டஜன் பேர் மீது அந்த வாகனம் மோதி இருப்பதாக பொலிஸ் பிரதானி டான் தொம்சன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை இசைவாத்தியக் குழுவுக்கு பின்னாலேயே இந்த வாகனம் மோதியுள்ளதாக பார்த்தவர்கள் மற்றும் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மூலம் தெரியவருகிறது.

இது தொடர்பில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பயங்கரவாதச் செயலுடன் தொடர்புபட்டதல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மற்றொரு சம்பவத்தில் இருந்து தப்பிச்செல்லும்போது பேரணியில் இருந்த கூட்டத்தினர் மீது மோதி இருப்பதாக இது பற்றி ஆரம்பக் கட்ட விசாரணைகள் தொடர்பில் தெரிந்த சட்ட அமுலாக்கல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரின் வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது பற்றி தீவிர விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூட்டத்தின் மீது செலுத்தப்பட்ட வாகனத்தை நிறுத்துவதற்கு பொலிஸார் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து வோகேசாவில் உள்ள அரச பாடசாலைகள் நேற்று மூடப்பட்டன. வீதிகளும் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன.

Tue, 11/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை