இரசாயன கலவையில் மாற்றம் செய்யப்பட்டதா என்பது குறித்த ஆய்வு அறிக்கை தாமதம்

இரு அறிக்கைகளும் கிடைத்த பின்னரே உண்மை நிலையை வெளியிட முடியும்

- இராஜாங்க அமைச்சர் லசந்த நேற்று சபையில் தெரிவிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் இரசாயன கலவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித முடிவையும் தெரிவிக்க முடியாதுள்ளது என்றும் அது தொடர்பான ஆய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும் உண்மை நிலையை வெளிப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எரிவாயு சிலிண்டர்களில் கசிவு மற்றும் வெடிப்பு ஏற்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. அதுதாெடர்பாக ஆராயும் வகையில் ஆறு மாவட்டங்களில் இருந்து எரிவாயு மாதிரிகளைப் பெற்று ஆய்வு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எரிவாயு சிலிண்டரின் இரசாயன கலவையின் அளவில் மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளதா என்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானத்திற்கும் வர முடியாவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் நாட்டில் தற்போது முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் விசேட கூற்று ஒன்றை முன்வைத்து சபையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

18 லீற்றர் நிறை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் கொள்வனவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆய்வு கூடம் மூலமான அறிக்கை கிடைத்துள்ளது. அதேவேளை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் கசிவு மற்றும் வெடிப்புகள் தொடர்பாக ஆராயும் அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை.

இரண்டு அறிக்கைகளையும் ஆராய்ந்த பின்னரே அது தொடர்பான முடிவுக்கு வரமுடியும் என மொரட்டுவை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ள நிலையில் அது கிடைத்ததும் சமையல் எரிவாயு சிலிண்டரில் இரசாயன கலவை அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற தீர்மானம் தொடர்பில் சபைக்கு அறிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் நேற்று சபையில் மேலும் தெரிவிக்கையில்:

சமையல் எரிவாயு சிலிண்டரின் இரசாயன கலவையின் அளவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானத்திற்கும் வர முடியாமல் உள்ளது.

அதுதாெடர்பில் உண்மை நிலையை அறிக்கை கிடைத்ததும் சபைக்கு அறிவிக்க முடியும்.

அதற்கிணங்க18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டரின் கொள்வனவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதுதொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கை கிடைத்துள்ளது. அதற்கிணங்க தற்போது அந்த அறிக்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி அமைக்கப்பட்டுள்ளது.அதேபோன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களில் கசிவு மற்றும் வெடிப்பு ஏற்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. பல வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதுதாெடர்பாக ஆராயும் வகையில் ஆறு மாவட்டங்களில் இருந்து எரிவாயு மாதிரிகளைப் பெற்றுக்கொண்டு அதனை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இரசாயன ஆய்வு கூடத்துக்கு அனுப்பியுள்ளோம். அதன் அறிக்கை மிக விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

அந்த அறிக்கை கிடைத்ததும் அதனையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி அதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ளமுடியும்என எதிர்பார்க்கின்றோம்.

இரண்டு அறிக்கைகளையும் ஆராய்ந்த பின்னரே அதுதொடர்பான உண்மை நிலைமையை தெரிவிக்க முடியும் என மொரட்டுவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க சமையல் எரிவாயு சிலிண்டரில் இரசாயன கலவையில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் தீப்பற்றிக் கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாகவே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அதுதொடர்பான அறிக்கை கிடைக்கும் வரை எந்தவொரு தீர்மானத்துக்கும் வரமுடியாது. மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் அறிக்கை கிடைத்த பின்னர் அதுதொடர்பாக சபைக்கு அறிவிக்க முடியும்.

அத்துடன் சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள 1960 முதல் பரிசோதனை ஆய்வு கூடங்கள் நாட்டில் கிடையாது.

அதேபோன்று சமையல் எரிவாயு தொடர்பான ஒழுங்குபடுத்தலை மேற்கொள்வதற்கான எந்த அரச நிறுவனமும் எந்த அரசாங்க காலத்திலும் உருவாக்கப்படவில்லை.

எவ்வாறாயினும் இதனை கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்படாதவகையில் நடவடிக்கை எடுப்பது அனைவரதும் பொறுப்பாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்

இதன்போது சபையில் குறக்கிட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள பாராளுமன்ற கோப் குழுவுக்கு அதனை சமர்ப்பிக்க முடியும். அதன் மூலம் அது தொடர்பான உண்மை தன்மையை அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

 

Tue, 11/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை