நியூஸிலாந்திடம் வரலாற்று தோல்வியை சந்தித்த இந்தியா

20‍க்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கெதிரான சுப்பர் 12 லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம், இம்முறை ரி 20 உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை நியூசிலாந்து அணி பதிவுசெய்ததுடன், இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்தது.

ரி 20 உலகக் கிண்ணத் தொடரில் கடந்த (31ம்திகதி ) இரவு துபாயில் நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக இஷான் கிஷன் – கேஎல் ராகுல் களமிறங்கினர். இதில் இஷான் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, கேஎல் ராகுலும் 18 ஓட்டங்களோடு வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா, அணித்தலைவர் விராட் கோஹ்லி, ரிஷப் பாண்ட் என அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்திய அணி 100 ஓட்டங்ககளை எட்டுமா என்ற சந்தேகமும் எழுந்தது.

எனினும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியாவும் 23 ஓட்டங்களில் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ரவீந்திர ஜடேஜா சில பவுண்டரிகளை அடிக்க, 20 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 26 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 23 ஓட்டங்களையும் எடுத்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுக்களையும், இஷ் சோதி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதையடுத்து எளிய இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணிக்கு ஆரம்ப வீரர்களான மார்டின் கப்டில் – டெரில் மிட்செல் அதிரடி ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர். இதில் மார்டின் கப்டில் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன்பின் டெரில் மிட்செலுடன் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன்னும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களைக் குவித்தனர்.

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெரில் மிட்செல் 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரைச்சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இருப்பினும், மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த அணித்தலைவர் கேன் வில்லியம்சன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேன் வில்லியம்சன் 33 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இந்தத் தோல்வியின் மூலம் இந்திய அணி நடப்பு ரி 20 உலகக் கிண்ணத் தொடரில் அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்து அரை இறுதிக்குச் செல்லும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

இதனிடையே, ஐசிசியின் எந்த ஒரு வகையான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலும் கடந்த 18 வருடங்களாக இந்தியாவால் நியூசிலாந்தை தோற்கடிக்க முடியவில்லை என்ற மோசமான சாதனை இந்தப் போட்டியிலும் தக்கவைக்கப்பட்டது.

Tue, 11/02/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை