சியாரலியோனில் எண்ணெய் டேங்கர் மோதி பெரும் வெடிப்பு: 98 பேர் பலி

சியாரலியோன் தலைநகர் பிரீடவுனில் லொரி ஒன்றுடன் எண்ணெய் டேங்கர் மோதியதில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் குறைந்தது 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது பரபரப்பான வீதியில் வாகனங்கள் மற்றும் மக்கள் கூடியிருந்தபோது எண்ணெய் கசிந்து தீ பரவியுள்ளது. இந்த டேங்கரைச் சூழ கருகிய நிலையில் சடலங்கள் காணப்படும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

சம்பவ இடத்தை பார்வையிட்ட துணை ஜனாதிபதி மொஹமத் ஜுல்தெஹ் ஜல்லோ, இது ஒரு 'தேசிய அனர்த்தம்' என்று தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரீடவுனை சூழவிருக்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் சுமார் 92 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரபரப்பான சொயித்ரா சந்தைக்கு வெளியில் சந்தி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எண்ணெய் டாங்கர் அருகில் இருக்கும் எண்ணெய் நிரப்பு நிலையத்தில் தனது எண்ணெயை வெளியேற்றுவதற்கு நுழையும்போதே லொரியுடன் மோதி இருப்பதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வாகனத்தில் இருந்து எண்ணெய் கசிவதை அவதானித்த ஓட்டுநர் அங்கிருந்து வெளியேறி மக்களை விலகி இருக்கும்படி எச்சரித்துள்ளார். எனினும் மக்கள் எரிபொருளை சேகரிக்க முயன்றபோதே வெடிப்பு இடம்பெற்றுள்ளது என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது பஸ் வண்டி ஒன்று முற்றாக எரிந்திருப்பதாகவும் அருகில் இருக்கும் சந்தைப் பகுதி மற்றும் கடைகளும் தீப்பற்றி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பல எரிந்த உடல்கள் சம்பவ இடத்தில் காணப்பட்டதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த ப்ரிமா புரேஹ செசெய் தெரிவித்துள்ளார். 'இது ஒரு பயங்கரமான விபத்து' என்று உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் துறைமுக நகரான பிரீடவுன் அண்மைய ஆண்டுகளில் பல மோசமான அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளது.

கடந்த மார்ச்சில் நகரின் சேறிப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 80க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதோடு 5,000க்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்தனர்.

2017 ஆம் ஆண்டு கடும் மழையால் சேற்று மண் நகரை நொக்கி அடித்து வந்ததில் 1,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதோடு சுமார் 3,000 பேர் வீடுகளை இழந்தனர்.

Mon, 11/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை