ஈக்வடோர் சிறையில் புதிய மோதல்: 68 கைதிகள் பலி

ஈக்வடோர் சிறை ஒன்றில் போட்டி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட புதிய மோதல் ஒன்றில் குறைந்தது 68 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த செப்டெம்பரில் இவ்வாறான மோதலில் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

குவாயகுல் நகரில் உள்ள சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த கலவரம் வெடித்துள்ளது.

சிறைக்குள் நுழைந்த பொலிஸ் மூலோபாயப் பிரிவு துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் கத்திகளை கண்டுபிடித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈக்வடோர் சிறைகளில் இந்த ஆண்டில் இதுவரை சுமார் 300 கைதிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த செப்டெம்பரில் கும்பல்கள் தொடர்பில் ஏற்பட்ட வன்முறை அந்நாட்டு வரலாற்றில் மோசமானதாக இருந்தது.

இந்நிலையில் தற்போதைய சிறை மோதல்களில் 25 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சிறையில் இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட சிறு ஆயுத மோதலில் மூன்று கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை பின்னேரத்தில் மேலும் வன்முறைகள் வெடித்த நிலையில் மேலதிக படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், விபரம் அறிய சிறை வளாகத்திற்கு வெளியே ஒன்று திரண்டுள்ளனர்.

குற்ற கும்பல் தலைவர் ஒருவர் முன்னதாக விடுவிக்கப்பட்ட நிலையில் போட்டிக் குழுக்களுக்கு இடையே எல்லை பிரச்சினை ஒன்றாகவே இந்த போதல் வெடித்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஈக்வடோர் சிறைகளில் அவைகளின் இட வசதியை விடவும் மேலதிகமாக சுமார் 9,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மோதல் இடம்பெற்ற சிறையில் 5,300 கைதிகளுக்கே இட வசதி இருக்கும் நிலையில் தற்போது அங்கு 8,500 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Mon, 11/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை