அரச ஊழியர்களது ஓய்வு வயது 65!

மீள் பரிசீலணை செய்யப்பட வேண்டும்

 

அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்துள்ளமை  அரசாங்கம் மேற்கொண்டுள்ள பொருத்தமில்லாத தீர்மானமாகுமென எதிர்க்கட்சி எம்பி ரஞ்சித் மத்துமபண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கம் அந்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

வருடாந்தம் புதிதாக 50 ஆயிரம் அரச சேவை வெற்றிடங்கள் நிலவுகின்ற நிலையில் அதற்காக காத்திருக்கின்றவர்களுக்கு பெரும் அநீதியே ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் படித்த இளைஞர்,யுவதிகள் மேலும் ஐந்து வருடங்கள் காத்திருக்க நேருகிறது. அதனால் பல்வேறு பிரச்சினைகளும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் உள்ளிட்ட அமைச்சுக்களின் வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: அரசாங்கம் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்துள்ள நிலையில் தற்போது அமைச்சுக்களில் பதவியிலுள்ள செயலாளர்கள் 65 வயது வரை குறித்த பதவியில் இருக்க நேரிடுகிறது.

அதேபோன்று இப்போது பதவியில் உள்ள பொலிஸ்மா அதிபர் தொடர்ந்து 65 வயது வரை பதவியில் இருப்பார். இதனால் அடுத்த வருடங்களில் பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்கள் உளரீதியாக பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 11/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை