மன்னார் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் 4,215 குடும்பங்கள் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒன்பது தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள தாழ்ந்த பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்புற்றுள்ளன. மழை தொடர்ந்து பெய்தால், மக்கள் இடம்பெயரும் தொகையும் அதிகரிக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மழை தொடர்ந்து பெய்வதால்,கூலித் தொழிலாளிகள் மற்றும் மீனவர்களின்  இயல்பு நிலைகளும் பாதிகப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தொடர்ந்து கடந்த முதலாம் திகதியிலிருந்து (01)  (09)  செவ்வாய் கிழமை வரை பெய்த மழையால் மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் 4215குடும்பங்களைச் சார்ந்த 14951பேர் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 3701குடும்பங்களைச் சேர்ர்ந்த 13192பேரும், மாந்தை மேற்கு பகுதியில் 340குடும்பங்களைச் சேர்ந்த 1092நபர்களும், நானாட்டான் பிரிவில் 08குடும்பங்களைச் சேர்ந்த 39நபர்களும், முசலி பிரதேச செயலகப் பிரிவில் 166குடும்பங்களைச் சேர்ந்த 628பேரும் பாதிப்புக்கு  உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் ஐந்து பாதுகாப்பான அமைவிடத்தில் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 96குடும்பங்களிலுள் 352நபர்களும், மாந்தை மேற்கு பிரிவில் ஒரு இடைத்தங்கல் நிலையத்தில் 4குடும்பங்களிலுள்ள 16நபர்களுமாக மொத்தம் 100குடும்பங்களில் 368பேர்கள் இடம்பெயர்ந்து ஆறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் பலர் இடம்பெயர்ந்து அயலிலுள்ள உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

மேலும் 31500ஏக்கர் அடி நீர் கொள்வனவுள்ள  மன்னார் மாவட்டத்தின் பிரதான குளமாகிய கட்டுக்கரைக்குளம், நீர் நிரம்பி 3அங்குல உயரத்தில் வான்பாய்ந்து வருவதாக மன்னார் மற்றும் வவுனியா நீர்பாசன பணிப்பாளர் தெரிவித்தார்.

தலைமன்னார் விஷேட நிருபர்

Wed, 11/10/2021 - 08:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை