ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு; பட்ஜட்டில் 30,000 மில்லியன் ரூபா ஒதுக்கு

பிரதமர் தலைமையிலான தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு

 வரலாற்றில் முதற்தடவையாக கல்விக்கு  பட்ஜட்டில் 7.51 வீத ஒதுக்கீடு

 பாராளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்பட இருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட இறுதி ஆவணத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ ஆராய்கையில்...

 

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு காணும் வகையில் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் மேலதிகமாக 30 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு காணப்படுவதாகவும் அவர் நேற்றைய தினம் ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க வரலாற்றில் முதல் தடவையாக கல்வித் துறைக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நூற்றுக்கு 7.51 வீதம் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுமார் 25 வருட காலமாக தொடரும் ஆசிரியர் மற்றும்  அதிபர்களுக்கான சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு காணும் வகையில் பாராளுமன்றக் கட்டிடத்தில் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே நிதி யமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நீண்டகாலமாக நீடித்த ஆசிரியர் அதிபர்களுக்கான சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.

இது தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் இதன்போது பாராட்டுகளை தெரிவித்துள்ளன.

அதற்கிணங்க மேற்படி தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு தீர்வு பெற்று கொடுத்தமைக்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

அது தொடர்பில் இங்கு மேலும் தெரிவித்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச:

நாம் முதலில் கடந்த ஜூலை 26ம் திகதி அமைச்சரவையில் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அதன் போது அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, லசந்த அழகியவன்ன ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை நியமித்தோம். பின்னர் அது நான்கு பேராக மட்டுப்படுத்தப்பட்டது அதன் பரிந்துரைகளை பெற்றுக்கொண்டோம்.

எவ்வாறாயினும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் எதிர்வரும் வரவு-செலவுத் திட்டம் மூலம் அது தொடர்பில் கவனம் செலுத்த தீர்மானித்தோம்.

தற்போது வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் உரிய பரிந்துரைகளுக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் அஸ்கிரி பீடம் உள்ளிட்ட மகாநாயக்க தேரர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோரும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இதற்குத் தீர்வொன்றை வழங்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டனர்.

அதேவேளை ஜனாதிபதியும் பிரதமரும் கல்வியமைச்சரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு எனக்கு பரிந்துரைகளை செய்தனர். தொழிற்சங்கங்களின் பூரண ஒத்துழைப்பும் எமக்கு கிடைத்துள்ளது.

எவ்வாறெனினும் எமது நாட்டின் பிள்ளைகளுக்கு கல்வியை பெற்றுக் கொடுப்பது எமது நோக்கமாக இருந்தது.தற்போது பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

நாம் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலும் மேற்படி நிதியை ஒதுக்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 11/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை