"முஜஹிதீன் போ அல்லாஹ்" எனும் வாட்ஸ்அப் குழுவில் அகப்பட்ட 287 பேர்

 குழுவில் தொடர்புபட்ட 702 பேரிடம் TID விசாரணை

இந்தியாவிலிருந்து செயற்பட்டுவரும் ஐ. எஸ். ஐ. எஸ். பயங்கரவாத அமைப்பு உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் இலங்கையர்கள் 702 பேர் சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைகள் பிரிவு தெரிவித்துள்ளது. பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவு மூலம் கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகேவிடம் அது தொடர்பான விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சு இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க பொலிஸ் மா அதிபரினால் மேற்படி விசாரணை நடவடிக்கைகள் தமது பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளது. இந்திய அரசின் புலனாய்வுப் பிரிவு மூலம் கைது செய்யப்பட்டுள்ள எஸ். சம்சுதீன் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டு அந்த நபரின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்ட போது மேற்படி நபர்கள் தொடர்பான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியிலிருந்த "முஜஹிதீன் போ அல்லாஹ்"என்ற வாட்ஸ்அப் குழுவில் இருந்த இளைஞர்கள் 287 பேரின் கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளதாக பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைகள் பிரிவு நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சஹ்ரான் ஹஷீம் நடத்திய சொற்பொழிவுகளின் குரல் பதிவு மற்றும் புகைப்படங்களும் மேற்படி கையடக்கத் தொலைபேசியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 11/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை