252 மில். ஆண்டுகள் பழமையான புதைபடிம தளம் ஜம்மு காஷ்மீரில்

காஷ்மீரிலுள்ள குரியுல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள விஹி மாவட்டம் புதைபடிவங்களின் களஞ்சியமாக விளங்குவதோடு பெர்மியன்-ட்ரயாசிக் அழிவின் ஆதாரங்களையும் கொண்டுள்ளது, 260 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதைப்படிம தளமாக விளங்கும் இது உலகிலுள்ள மிக பழமையான ஒன்றாகும்.

ஜம்மு - காஷ்மீரில் ஸ்ரீநகர் கான்மோ பகுதியிலுள்ள இந்த 252 மில்லியன் ஆண்டுகள் பழமையான குரியுல் பள்ளத்தாக்கு புதைபடிம தளத்தை முறையாக இணைத்தலும் பெர்மியன்-ட்ரயாசிக் பேரழிவு தொடர்பிலான களச் செயலமர்வும் அண்மையில் நடாத்தப்பட்டன. இது தொடர்பில் ஏ.என்.ஐ. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், வேட்டையாடப்பட்டதற்கான ஆதாரங்களைக் கொண்ட ஏராளமான புதைபடிமங்கள் இப்புதைபடிம தளத்தில் காணப்படுவது இச்செயலமர்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவை 252 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.

உலகின் முதன் முதலில் இடம்பெற்றதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள சுனாமி, குரியுல் பள்ளத்தாக்கின் கான்மோவிலுள்ள பாறைகளில் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளமை இச்செயலமர்வின் போது பலரது கவனத்தையும் ஈர்த்த முக்கிய வியடங்களில் ஒன்றாகும்.'

இது உலகளாவிய மரபுரிமைகளில் ஒன்றாக இருப்பதுடன், இதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் சுமார் 20 வருடங்களாக இடம்பெற்று வருகிறது. 252 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடல் மற்றும் தாவர உயிரினங்களின் பேரழிவினால் 95 வீதம் கடல் வாழ் உயிரினங்கள் அழித்துள்ளன' என்று தொல்லியல் பேராசிரியர் ஜி.எம். பட் தெரிவித்துள்ளார்.

குரியுல் பள்ளத்தாக்கு பாறைகளில் பெர்மியன் - ட்ரயாசிக் பேரழிவின் முக்கியத்துவம் மிக்க சான்றுகள் பாதுகாப்பாகக் காணப்படுவதால் உலகம் முழுவதிலுமிருந்தும் விஞ்ஞானிகளும் புவியியலாளர்களும் இங்கு வருகை தருகின்றனர். அவர்களில் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, அயர்லாந்து, சீனா, ஜப்பான், கனடா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் என்று ஏ.என்.ஐ குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீரில் காணப்படும் இப்புதைபடிம தளம் சீனாவில் உள்ளதை விடவும் மிகப் பெரியது என்று தொல்லியல் நிபுணர்களை ஆதாரம் காட்டியுள்ள ஏ.என்.ஐ, காஷ்மீரிலுள்ள இப்புதைபடிம தளம் ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுத்து வருகின்றது. கான்மோவில் உள்ள மூன்று மீட்டர் படிமம் சீனாவில் இருப்பதை விடவும் மிகப் பெரியது என்று உள்ளூர்வாசியான நதீம் அகமது குறிப்பிட்டுள்ளார்.

பரிணாமமும் பேரழிவும் எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் இத்தளம் பாதுகாக்கிறது. விலங்கியல் வல்லுநர்களுக்கு இது ஒரு பொக்கிஷமாகும். கான்மோ மாவட்ட அபிவிருத்தி சபையின் உறுப்பினர் ஐஜாஸ் ஹுஸைன்,'இது உலகின் மிகப் பழமையான மரபுரிமைத் தளம் என்று விஞ்ஞானிகள் எங்களிடம் கூறியுள்ளனர். அதனால் எமது எதிர்காலச் சந்ததியினருக்காகவும் இதைப் பாதுகாத்து மேம்படுத்துவது அவசியம் என்றார்.

Thu, 11/04/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை