250 மில்லியனை நெருங்கும் உலக கொரோனா பதிவுகள்

உலகளாவிய கொரோனா தொற்று பதிவுகள் 250 மில்லியனை நெருங்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில், தினசரி தொற்று சம்பவங்கள் 36 வீதமாக வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக ரோய்ட்டர்ஸ் புள்ளிவிபரம் காட்டுகிறது.

வைரஸ் பரவல் மந்தமடைந்தபோதும், வேகமாகப் பரவக்கூடிய டெல்டா திரிபு காரணமாக ஒவ்வொரு 90 நாட்களுக்கு 50 மில்லியன் புதிய தொற்று சம்பவங்கள் பதிவாகின்றன. முதலாவது 50 மில்லியன் தொற்று சம்பவத்திற்கு சுமார் ஓர் ஆண்டு எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ரஷ்யா, உக்ரைன் மற்றும் கிரேக்கம் போன்ற நாடுகளில் நோய்த்தொற்று சாதனை அளவுக்கு உச்சம் பெற்றிருக்கும் நிலையில், 240 நாடுகளில் 55 நாடுகளில் நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிழக்கு ஐரோப்பா அந்தப் பிராந்தியத்தில் மிகக் குறைவான தடுப்பூசி வழங்கப்பட்ட பகுதியாக உள்ளது. உலகெங்கும் பதிவாகும் அனைத்து புதிய தொற்றுகளில் பாதிக்கும் அதிகமானது ஐரோப்பிய நாடுகளில் இடம்பிடித்துள்ளது. இதில் ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு ஒரு மில்லியன் தொற்று சம்பவங்கள் பதிவாவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் இன்னும் ஒருமுறையேனும் தடுப்பூசி பெறாதவர்களாக இருப்பதாக ரோய்ட்டர்ஸ் தரவுகள் கூறுகின்றன. குறைந்த வருமானம் உடைய நாடுகளில் 5 வீதத்திற்கும் குறைவானவர்களே ஒரு முறையேனும் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

அடுத்த 12 மாதங்களில் ஏழை நாடுகளில் கொரோனா தடுப்பூசி திட்டம், சோதனை மற்றும் மருந்துக்காக 23.4 பில்லியன் டொலர் நிதியை உலகின் 20 மிகப்பெரிய பொருளாதார நாடுகளிடமும் உலக சுகாதார அமைப்பு மற்றும் உதவிக் குழுக்கள் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Tue, 11/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை