225 எம்.பிமாரையும் கைத்தறி ஆடைகளை அணிய தயாசிறி கோரல்

கைத்தறி ஆடைகளை பிரபலங்கள் அணிந்தால் மற்றவர்களும் அணிய ஆரம்பிப்பார்கள். எனவே 225 எம்.பிகளும் அவற்றை அணிந்து உள்நாட்டு கைத்தறி ஆடைகளை பிரபலப்படுத்த முன்வர வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். மயந்த திசானாயக்க எம்.பி(ஜ.ம.ச) எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

லக்சலவின் முதலாவது கொள்கலன் அமெரிக்காவுக்கு செல்கிறது. கைத்தறி ஆடைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப இருக்கிறோம். லக்சலவுடன் அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான்,டுபாய் உட்பட சில நாடுகள் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளன என்றார்.

மூலப்பொருள் இறக்குமதிக்கு விசேட திட்டம் ஏதாவது உள்ளதா? சவால்கள் என்ன? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

இறக்குமதியின் போது வரிகளுக்கு உட்பட்டே செய்ய வேண்டியுள்ளது. சலுசல ஊடாக இறக்குமதி செய்து வழங்க முடியுமா என ஆராய்ந்து வருகிறோம்.

இந்தக் கைத்தொழிலில் பிரதான பிரச்சினை மூலப்பொருட்களில் அதிகவிலையாகும். விற்பதில் கூட பிரச்சினை உள்ளது. பத்திக் விற்பதிலும் சிக்கல் உள்ளது. கைத்தறி ஆடைகள் சந்தையில் உள்ளன. வெள்ளை லினன் ஆடைகளை இறக்குமதி செய்யாது உள்நாட்டில் தயாரிக்கும் ஆடைகளை எம்.பிகள் அணிந்து முன்மாதிரியாக இருக்க வேண்டும். எமது கைத்தறி உடைகளை பிரபலங்கள் அணிந்தால் மற்றவர்களும் அணிய ஆரம்பிப்பார்கள். 225 எம்.பிகளும் முன்வர வேண்டும். சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே,ரோஹினி கவிரத்ன, தளதா அதுகோரள போன்றோர் அணிகின்றனர். கைத்தறி உடைகளை ஆண் எம்பிக்களும் அணிந்தால் இந்தத் துறையை மேம்படுத்த உதவியாக அமையும் என்றார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Wed, 11/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை