இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: மழை குறுக்கிட்டதால் மேற்கிந்தியதீவு அணி 224/9 ஓட்டங்கள் குவிப்பு

இலங்கை - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்றுள்ளது.காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில் 113 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது நாளில் களமிறங்கியதுடன், நேற்றைய ஆட்டநேரமானது மதியபோசன இடைவேளைக்கு பின்னர் மழை காரணமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இரண்டாம் நாளில் மே.தீவுகளின் முதல் இலக்க துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தாலும், நேற்றைய தினம் ஜேசன் ஹோல்டர், கெயல் மேயர்ஸ் மற்றும் ரகீம் கொர்ன்வேல் ஆகியோர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

குறிப்பாக ஜேசன் ஹோல்டர் மற்றும் கெயல் மேயர்ஸ் ஆகியோர் ஆரம்பம் முதல் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு சவால் கொடுக்க தொடங்கினர். இதில், 45 ஓட்டங்களை கெயல் மேயர்ஸ் பெற்றிருந்த போதும், பகுதிநேர பந்துவீச்சாளர் தனஞ்சய டி சில்வாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து பிரவீன் ஜயவிக்ரம ஜேசன் ஹோல்டரின் (36 ஓட்டங்கள்), விக்கெட்டினை வீழ்த்தி அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

அடுத்ததாக களமிறங்கிய ரகீம் கொர்ன்வல் மற்றும் ஜசூவா டி சில்வா ஆகியோர் இலங்கை அணிக்கு சவால் கொடுக்க தொடங்கினர். எனவே, மதியபோசன இடைவேளையின் போது, மே.தீவுகள் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் மதியபோசன இடைவேளைக்கு பின்னர் மே.தீவுகள் அணி களமிறங்க, இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அழைக்கப்பட்டனர். போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களில் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் அழைக்கப்பட, சிறப்பாக துடுப்பெடுத்தாடிவந்த ரகீம் கொர்ன்வல், 39 ஓட்டங்களுடன் வெளியேற்றப்பட்டார்.

போட்டியில் மழைக்குறுக்கிட்டதன் காரணமாக, இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன்போது, மே.தீவுகள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பின்னர், தொடர்ந்தும் மழைக்குறுக்கிட்டுவந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தநிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியை விட, 162 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இன்று போட்டியின் நான்காவது நாளாகும்.

Wed, 11/24/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை