சீரற்ற காலநிலையால் 2,12,060 பேர் பாதிப்பு

நேற்றுவரை 25 பேர் பலி; உடமைகளுக்கும் சேதம்

சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண் சரிவு, காற்று, இடி மின்னல் தாக்கம் காரணமாக நாட்டில் 17 மாவட்டங்களில் 60,264 குடும்பங்களைச் சேர்ந்த 2,12,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 25 பேர் பலியாகியுள்ளதுடன் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை 13 ஆயிரத்து 671 குடும்பங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கு 166 பேர் பாதுகாப்பான இடங்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

பதுளை, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, முல்லைத்தீவு, கொழும்பு, வவுனியா, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அனுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கோகாலை, கிளிநொச்சி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் மேற்படி பாதிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க புத்தளம் மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு பதிவாகியுள்ளதுடன் அந்த மாவட்டத்தில் 38 ஆயிரத்து 298 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 32,375 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் அந்த நிலையத் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டத்தில் 23 வீடுகள் முழுமையாக செதமடைந்துள்ளதுடன் மேலும் 1229 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

தொடரும் சீரற்ற காலநிலையைக் கருத்திற் கொண்டு பொதுமக்கள் அவதானமாகவும் பாதுகாப்புடனும் செயற்படுமாறு அந்த நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 11/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை