2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் இன்று சபையில்

நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவினால் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சமர்ப்பிப்பு

 பாதுகாப்பு துறைக்கு -373 பில்.ரூபா

 நிதி அமைச்சுக்கு -185.9 பில்.ரூபா

 கல்வி அமைச்சுக்கு -127.6 பில்.ரூபா

 சுகாதார துறைக்கு -153.5 பில்.ரூபா

 விவசாய துறைக்கு -249.9 பில்.ரூபா

 

சுதந்திர இலங்கையின் 76ஆவது வரவு,செலவுத்திட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன்றத்தில். சமர்ப்பிக்கப்படுகிறது.. அதற்கிணங்க வரவு, செலவுத்திட்ட விவாதம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். வரவு-செலவுத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி நிதியமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இம்முறை வரவு, செலவுத் திட்டத்தில் அதிகரித்த நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கிணங்க பாதுகாப்பு அமைச்சுக்கு 373 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்துக்கு நிதி அமைச்சுக்கு 185.9 பில்லியன் ரூபாவும் கல்வி அமைச்சுக்காக 127.6 பில்லியன் ரூபாவும் சுகாதார அமைச்சுக்காக 153.5 பில்லியன் ரூபாவாகவும், விவசாய அமைச்சுக்காக 243.9 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நிலைமையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இம்முறை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதோடு வரலாற்றில் முதன் முறையாக இம்முறை பட்ஜட்டில் மொத்த நிதி ஒதுக்கீட்டில் 7.51 வீதம் ஒதுக்கப்படுகிறது.இதன் மூலமாக 25 வருட காலமாக நீடித்த அதிபர்,ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்க தூர நோக்குடன் நிதி அமைச்சர் நடவடிக்கை எடுத்து 30 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியிருப்பது விசேட அம்சமாகும். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிகரித்த நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கிணங்க பாதுகாப்பு அமைச்சுக்கு 373 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அடுத்த வருடத்துக்கு நிதி அமைச்சுக்கு 185.9 பில்லியன் ரூபாவும் கல்வி அமைச்சுக்காக 127.6 பில்லியன் ரூபாவும் சுகாதார அமைச்சுக்காக 153.5 பில்லியன் ரூபாவாகவும், விவசாய அமைச்சுக்காக 243.9 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

102 தரப்பினரின் கருத்துக்கள் பெறப்பட்டு பரிந்துரைகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ள அதே வேளை பாரம்பரிய வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட புதிய தொலைநோக்கு மற்றும் வேலைத்திட்டம் அடங்கிய வரவு செலவுத் திட்டமொன்று இம்முறை முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பசுமைப் பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் நிர்வாகம் ஆகிய துறைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதேவேளை "சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைவாக செயற்படுவதன் மூலம் நாட்டின் வருமானத்தை உயர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் எதிர்பார்ப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்துக்கிணங்க அரசாங்கத்தின் மொத்த செலவுகள் தொடர்பில் அடுத்த வருடத்துக்காக 2,505.3 பில்லியன் ரூபா செலவாகுமென திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அந்தச் செலவானது இந்த வருடத்தின் அரசாங்கத்தின் செலவு 2,538 பில்லியனாக இருந்துள்ள நிலையில் 33 பில்லியன் ரூபா அரசாங்கத்தின் செலவு குறைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் நிதியாண்டுக்கான சேவைகளுக்கான செலவீனங்களுக்கு திரட்டு நிதியத்திலிருந்து மற்றும் அரசாங்கத்துக்குரிய அல்லது அதன் கையாளுகையிலுள்ள ஏனைய நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் இலங்கைக்குள் அல்லது அதற்கு வெளியே கடன் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றுக்காக இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.

இதற்கமைய 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான சேவைக்காக மதிப்பிடப்பட்ட இரண்டாயிரத்து ஐநூற்று ஐந்து பில்லியன் முன்னூற்று நாற்பத்தாறு மில்லியன் ஐந்நூற்று ஐம்பத்தெட்டாயிரம் ரூபா அரசாங்கத்தின் செலவீனத்துக்குப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அரசியலமைப்பின் xvii பிரிவுக்கமைய அரசாங்கத்தின் நிதி தொடர்பான முழுமையான கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டிருப்பதுடன் வரிவிதிப்பு, திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்துக்குரிய அல்லது அதன் கையாளுகையில் உள்ள ஏனைய நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வது உள்ளிட்ட விடயங்களுக்குப் பாராளுமன்றத்தின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

நவம்பர் 13ஆம் திகதி சனிக்கிழமை முதல் நவம்பர் 22ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஏழு நாட்கள் வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும். நவம்பர் 22ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 5.00 மணிக்கு இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

நவம்பர் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் குழு நிலையிலான விவாதம் ஆரம்பமாகவிருப்பதுடன் சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10ஆம் திகதி வரை 16 நாட்கள் விவாதத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்காக இவ்வருடம் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை சைகை மொழியிலும் ஒளிபரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரவு - செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இன்றைய தினம் முதல் விவாதம் நடைபெறும். இக் காலப்பகுதியில் சுகாதார பாதுகாப்பு ஒழுங்குவிதிகளுக்கமைய பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் பொதுமக்கள் கலரி மக்களுக்காக திறக்கப்படாது என்றும், வரையறுக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகள் வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது அனுமதிக்கப்படவுள்ளனர்.

வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்காக விசேட விருந்தினர்கள் கலரி திறக்கப்பட்டிருக்கும்.

இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவுத்திட்டம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவு- செலவுத்திட்டமாகும். (ஸ)

Fri, 11/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை