20க்கு20 உலகக் கிண்ணம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

20க்கு20 உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான சுப்பர் 12 லீக் போட்டியில் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இதன்மூலம் இம்முறை ரி 20 உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை இந்திய அணி பதிவுசெய்தது. ரி 20 உலகக் கிண்ணத் தொடரில் கடந்த (03ம் திகதி) இரவு நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா – கேஎல் ராகுல் ஜோடி அதிரடியான ஆரம்பத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைச்சதம் அடித்து அசத்தினர். மேலும் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 140 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர்.

ரோஹித் சர்மா 74 ஓட்டங்களுடனும், கேஎல் ராகுல் 69 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பாண்ட் – ஹர்திக் பாண்டியான ஆகிய இருவரும் அதிரடியாக ஓட்டங்களைக் குவிக்க இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றுக்கெண்டது.

இந்திய அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 35 ஓட்டங்களையும், ரிஷப் பாண்ட் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் கரீம் ஜனத் மற்றும் குல்பதீன் நைப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதையடுத்து 211 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

அந்த அணியின் முன்வரிசை வீரர்களான ஹஸ்ரதுல்லாஹ் ஷஸாய், மொஹமட் ஷசாத், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

தொடர்ந்து வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுக்க, ஆப்கானிஸ்தான் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கரீம் ஜனத் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும், அணித்தலைவர் மொஹமட் நபி 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்திய அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, நடப்பு ரி20 உலகக் கிண்ணத் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில இருந்து 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதனால் நான்காவது இடத்தில் இருந்த நமீபியா அணி ஐந்தாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. கடைசி இடத்தில் ஸ்கொட்லாந்து அணி உள்ளது.

இந்திய அணி, தமது அடுத்த போட்டியில் ஸ்கொட்லாந்தை இன்று வெள்ளிக்கிழமையும் (05), ஆப்கானிஸ்தான் அணி, தமது கடைசிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் (07) சந்திக்கவுள்ளது.

Fri, 11/05/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை