20க்கு20 உலகக் கிண்ணம்: அரையிறுதிக்கு தகுதிபெற்றது பாகிஸ்தான் அணி

20க்கு 20 உலகக் கிண்ணத்தில் சுபர் 12 சுற்றின் நமீபியா அணிக்கெதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 45 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் சுப்பர் 12 சுற்றின் இரண்டாவது குழுவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

20க்கு20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்றுமுன்தினம் (02) இரவு அபுதாபியில் நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் – நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர்களான மொஹமட் ரிஸ்வான், பாபர் அசாம் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சிறப்பாக விளையாடிய அணித்தலைவர் பாபர் அசாம் 49 பந்துகளில் 70 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறத்தில் நமீபியா அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட மொஹமட் ரிஸ்வான் 50 பந்துகளில் அரைச்சதம் கடந்து 79 ஓட்டங்களையும், அவருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய மொஹமட் ஹபீஸ் 16 பந்துகளில் 5 பௌண்டரிகளை விளாசி 32 ஓட்டங்களைக் குவித்தார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஒவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நமீபியா அணியின் பந்துவீச்சில் டேவிட் வீஸி மற்றும் ஜான் ப்ரைலின்க் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய நமீபியா அணி ஆரம்பத்திலே தடுமாறியது. இருப்பினும் கிரைக் வில்லியம்ஸ் – டேவிட் வீஸி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வலுச்சேர்த்தனர்.

இதில் கிரைக் வில்லியம்ஸ் 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பின்வரிசை வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். இதனால் 20 ஓவர்கள் நிறைவில் நமீபியா அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

துடுப்பாட்டத்தில் டேவிட் வீஸி ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹசன் அலி, இமாத் வசிம், சதாப் கான் மற்றும் ஹரீஸ் ரவூப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியதுடன், இம்முறை ரி 20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணியைத் தொடர்ந்து அரையிறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இரண்டாவது அணியாக தகுதிபெற்றது.

20க்கு20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக பங்குபற்றியுள்ள நமீபியா அணி, இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2இல் தோல்வியைத் தழுவியுள்ளது.

பாகிஸ்தான் அணி சுப்பர் 12 சுற்றில் தமது கடைசி லீக் போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) ஸ்கொட்லாந்து அணியை சந்திக்கவுள்ளதுடன், நமீபியா அணி தமது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை நாளை வெள்ளிக்கிழமை (05) எதிர்கொள்கின்றது.

Thu, 11/04/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை