சீரற்ற காலநிலை; இதுவரை 20 பேர் பலி; 17,481குடும்பங்கள், 62,247 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை; இதுவரை 20 பேர் பலி; 17,481குடும்பங்கள், 62,247 பேர் பாதிப்பு-Inclement Weather-20 Person Killed So Far

- 3 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை
- அனர்த்த எச்சரிக்கைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக தற்போது வரை குழந்தை ஒன்று உட்பட 20 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் 5 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் 17 மாவட்டங்களைச் சேர்ந்து 17,481குடும்பங்களைச் சேர்ந்த 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வனர்த்தம் காரணமாக, 18 வீடுகள் முற்றாகவும், 960 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கண்டி, கேகாலை, குருணாகல் மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

மாத்தளை, இரத்தினபுரி, கம்பஹா, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை

மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளிலிருந்து வௌியேறாதவர்கள், பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக அதிகாரத்தை பயன்படுத்தி வௌியேற்றப்படுவார்கள் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

உரிய கிராம அலுவலரால் அறிவிக்கப்பட்ட போதிலும் குறித்த இடத்தை விட்டு செல்லாத நிலையில், இடம்பெற்ற அனர்த்தமொன்றில் இரு உயிர்கள் காவு கொள்ளப்பட்ட சம்பவத்தை அடுத்து, குறித்த நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல உயிர்கள் பலி

இதேவேளை, கேகாலை மற்றும் குருணாகலில் இரண்டு வீடுகளில் மண்சரிவு ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

கேகாலை, புஸ்செல்ல, தேவாலகம பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் தந்தையும் மகனும் காணாமல் போயுள்ளதுடன் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. தாயார் கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீரற்ற காலநிலை; இதுவரை 20 பேர் பலி; 17,481குடும்பங்கள், 62,247 பேர் பாதிப்பு-Inclement Weather-20 Person Killed So Far

அத்துடன், குருணாகல், தொடம்கஸ்லந்த கொரொஸ்ஸ பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தம்பதியொன்று உயிரிழந்துள்ளது. பலியானவர்கள் 65 மற்றும் 70 வயதுடையவர்களாவர்.

கேகாலை பிரதேசத்தில் மண்மேடு சரிந்ததில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் இராணுவத்தினரும் நிவாரண குழுக்களும் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வானிலை அறிவிப்பு

இதேவேளை, தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேற்கு - வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையை அண்மித்ததாக வட தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலைமாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்தவேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடற் பிரதேசங்களில் வானிலை

அத்துடன் நாட்டின் பல்வேறு கடற்பரப்புகளிலும் 65 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படும் நிலையில் மறு அறிவித்தல் வரை கடல் தொழிலில் ஈடுபடுவது மற்றும் கடலில் பயணம் மேற்கொள்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கு,கிழக்கு,வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை,கண்டி,அனுராதபுரம், நுவரெலியா உள்ளிட்ட சில மாவட்டங்களிலலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் மாத்தளை, பொலநறுவை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை, தற்காலிகமாக ஏற்படும் கடும் காற்று, மின்னல் போன்ற இயற்கை அனர்த்தங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் பாதுகாப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அந்தத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 

அனர்த்த எச்சரிக்கை தொடர்பில் அவதானம்

 

அதேவேளை நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மண்சரிவு, மண்மேடுகள் சரிதல், மரங்கள் முறிந்து விழுதல், கற்பாறைகள் உருளுதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படலாம் என்றும் அவ்வாறான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறான அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தேவையான ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தை தொடர்பு கொள்ள முடியும் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக அவ்வப்போது வெளியிடப்படும் அறிவித்தல்களுக்கு பொதுமக்கள் அவதானம் செலுத்துவது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளது.

வான் கதவுகள் திறப்பு

அதேவேளை கடும் மழை காரணமாக பெருமளவு ஆறுகள், நீர்த்தேக்கங்கள்,குளங்கள் ஆகியவற்றில் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்படுவதாகவும் 10 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இராஜாங்கனை, தெதுறுஓயா, லக்ஷபான, குகுளேகங்க,தப்போவ, கொத் மலை, விக்டோரியா மற்றும் அங்கமுவ ஆகியவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களுக்களிலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கை நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 11/10/2021 - 10:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை