பொறுப்புடன் நடந்தால் கொவிட் 19 கட்டுப்படும்

மக்களுக்கு இராணுவத் தளபதி அறிவுரை

நாடளாவிய ரீதியில் மாகாணங்களுக்கிடையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டதன் பின்னரான மக்களின் செயற்பாடுகள் கவலை யளிப்பதாக கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளி மாவட்டங்களில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள அவர், மக்களின் தற்போதைய நடமாட்டங்களை அவதானிக்கும் போது நாட்டில் மீண்டும் எச்சரிக்கை நிலை உருவாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் கொழும்பு, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் 50ற்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனம் காணப்பட்டு வரும் நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை முற்றாக நீக்கப்பட்ட பின்னர் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை மீறி அலட்சியமாக செயற்படுவதை கவனிக்க முடிவதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

தற்போது நாளாந்தம் 500க்கும் 600க்கும் இடைப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் புதிதாக இனம்காணப்பட்டு வரும் நிலையில் 10க்கும் 25க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையினர் மரணமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டிலிருந்து வெளியேறும் போது கண்டிப்பாக முகக் கவசத்தை அணிந்துகொள்ளுமாறும் சுகாதார வழிகாட்டல்களை முறையாகக் கடைப்பிடித்து தொற்று உருவாவதை தடுக்கும் வகையில் செயற்படுமாறும் தாம் நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 11/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை