கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஐரோப்பாவில் புதிய ஆர்ப்பாட்டங்கள்

நெதர்லாந்தில் 2ஆவது நாளாக கலவரம்

ஐரோப்பாவில் கொரோனா தொற்று சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில் புதிய பொது முடக்கநிலை விதிகளுக்கு எதிராக நெதர்லாந்தில் புதிய வன்முறைகள் வெடித்துள்ளன.

ரொட்டாமில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு அடுத்த தினமும் ஹேகில் சைக்கிள்களுக்கு தீ வைத்த மக்கள் பொலிஸ் நிலையத்தின் மீது எரியும் பொருட்களை வீசினர்.

இந்தப் பிராந்தியத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பது கவலை அளிப்பதாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நோய்த் தொற்று அதிகரிப்பதற்கு எதிராக பல அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளன. பிராந்தியத்தின் பல நாடுகளிலும் அண்மைய நாட்களில் தினசரி தொற்றுச் சம்பவங்களில் பெரும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் நெதர்லாந்தின் பல நகரங்களின் இரண்டாவது நாளாகவும் கடந்த சனிக்கிழமை இரவு கலவரங்கள் வெடித்துள்ளன.

முகத்தை மறைக்கும் தொப்பிகளை அணிந்த கலகக்காரர்கள் ஹேக் வீதிகளில் இருக்கும் சைக்கிள்களுக்கு தீ வைத்தனர். இந்த கூட்டத்தினரை துரத்துவதற்கு கலகமடக்கும் பொலிஸார் தண்ணீர் பீச்சியடித்ததோடு நாய்கள் மற்றும் தடிகளையும் பயன்படுத்தினர். நகரில் அவசர நிலையை அறிவித்த அதிகாரிகள் குறைந்தது ஏழு பேரை கைது செய்தனர்.

நோயாளி ஒருவரை அழைத்துச் செல்லும் அம்புலன்ஸ் வண்டி ஒன்றின் மீது சிலர் ஜன்னல்கள் வழியாக கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐந்து பொலிஸார் காயமடைந்ததாகவும் முழங்காலில் காயம் ஏற்பட்ட ஒருவர் அம்புலன்ஸ் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் நகர பொலிஸார் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் வேறு பகுதிகளில் ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்ததால் இரு முன்னணி கால்பந்து போட்டிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. புதிய கொரோனா கட்டப்பாடுகள் காரணமாக ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாளைக்கு முன் ரொட்டர்டாமில் இடம்பெற்ற கலவரம் “ஒரு கூட்டு வன்முறை” என்று நகர மேயர் கண்டித்துள்ளார். நிலைமை உயிர் அச்சுறுத்தல் கொண்டதாக இருந்ததால் வானை நோக்கியும் நேராகவும் எச்சரிக்கை வேட்டுகளை செலுத்த வேண்டி ஏற்பட்டது என்று பொலிஸ் பேச்சாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிக் காயம் காரணமாக குறைந்து மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொவிட்-19 சம்பவம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்ததை அடுத்து நெதர்லாந்தில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் மூன்று வாரங்களுக்கு பகுதி அளவான முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டது. மதுபான கடைகள் மற்றும் விடுதிகள் இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும் என்பதோடு விளையாட்டு நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் அரசு புதிய முடக்க நிலையை அறிவித்ததை அடுத்து ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு 2022 பெப்ரவரியில் தடுப்பூசி பெறுவதை கட்டாயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் ஐரோப்பாவின் முதல் நாடாக ஆஸ்திரியா உள்ளது.

திங்கட்கிழமையில் இருந்து 20 நாட்களுக்கு ஆஸ்திரியாவில் முடக்கநிலை அமுல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படுவதோடு மக்கள் வீடுகளில் இருந்து பணிபுரிய கோரப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராக குரோசிய தலைநகர் சக்ரெப்பில் ஆயிரக்கணக்கானவர்கள் பேரணி நடத்தியுள்ளனர். தொழில் இடங்களில் தடுப்பூசி பெற்றதற்கான அனுமதிச் சீட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு எதிராக இத்தாலியின் சில நூறு பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Mon, 11/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை