சீரற்ற காலநிலையால் 11 பேர் பலி

7,167 பேருக்கு அதிகமானோர் பாதிப்பு, பல நகரங்கள் நீரில் மூழ்கின

* கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை

* சீரற்ற காலநிலை தொடருமென எதிர்வுகூறல்

* 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

* நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

* கங்கைகளுக்கு அருகில் வசிப்போர் குறித்து கவனம்

 

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் நிலவும் தற்போதைய கடும் மழையுடனான சீரற்ற காலநிலை தொடர்ந்தும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க நாட்டின் சில பிரதேசங்களில்  150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி இடம்பெறும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக நேற்று வரை குழந்தை ஒன்று உட்பட 11 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் 5 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் 16 மாவட்டங்களில் 1836 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 89 வீடுகள் பகுதியளவிலும் மேலும் சில வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

கொழும்பு -– சிலாபம் பிரதான வீதி நேற்று நீரில் மூழ்கியதாகவும் மகா ஓயா பெருக்கெடுத்த காரணத்தினால் கிரியுல்ல நகரம் நீரில் மூழ்கியதால் குருநாகல் -கொழும்பு வீதி தற்காலிகமாக போக்குவரத்துக்கு மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நாட்டின் பல்வேறு கடற்பரப்புகளிலும் 65 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படும் நிலையில் மறு அறிவித்தல் வரை கடல் தொழிலில் ஈடுபடுவது மற்றும் கடலில் பயணம் மேற்கொள்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கு,கிழக்கு,வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை,கண்டி,அனுராதபுரம், நுவரெலியா உள்ளிட்ட சில மாவட்டங்களிலலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் மாத்தளை, பொலநறுவை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை, தற்காலிகமாக ஏற்படும் கடும் காற்று, மின்னல் போன்ற இயற்கை அனர்த்தங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் பாதுகாப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அந்தத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளை நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மண்சரிவு, மலைக் குன்றுகள் சரிதல், மரங்கள் முறிந்து விழுதல், கற்பாறைகள் உருளுதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படலாம் என்றும் அவ்வாறான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறான அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தேவையான ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தை தொடர்பு கொள்ள முடியும் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக அவ்வப்போது வெளியிடப்படும் அறிவித்தல்களுக்கு பொதுமக்கள் அவதானம் செலுத்துவது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளது.

அதேவேளை கடும் மழை காரணமாக பெருமளவு ஆறுகள், நீர்த்தேக்கங்கள்,குளங்கள் ஆகியவற்றில் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்படுவதாகவும் 10 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இராஜாங்கனை, தெதுறுஓயா, லக்ஷபான, குகுளேகங்க,தப்போவ, கொத் மலை, விக்டோரியா மற்றும் அங்கமுவ ஆகியவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களுக்களிலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கை நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லுமாறும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 11/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை