யாழ். கல்லுண்டாய் வெளி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க RO Plant

யாழ். கல்லுண்டாய் வெளி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க RO Plant

- யாழ். ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் நடவடிக்கை

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள், நீண்ட நாட்களாக எதிர்கொண்டுள்ள குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக RO Plant அமைப்பதற்குரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தொடர்ச்சியான கவனத்தை செலுத்திவந்தார். இந் நிலையில், கல்லுண்டாய் பகுதியில் RO Plant அமைப்பதற்கான அறிவிப்பு தற்போது சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பில் கடந்தகாலங்களில் முறைப்பாடுகளை மக்கள் முன்வைத்திருந்தபோதும் அதற்கான தீர்வுகளை உரிய தரப்புகள் பெற்றுக்கொடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்தாண்டு தேர்தல்கால பரப்புரை கூட்டத்திற்கு அங்கஜன் இராமநாதன் சென்றிருந்தபோது, மக்களின் குடிநீர் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்து, அதற்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில், அப்பகுதி மக்களுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு சுயலாப அடிப்படையில் குடிநீர் வழங்க சில தரப்பினர் முனைந்த போது, அப்பகுதி மக்களின் எதிர்ப்பையடுத்து அவர்கள் வெளியேறியிருந்தனர்.

இதேவேளை, கல்லுண்டாய் பிரதேச மக்களின் கோரிக்கை தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளை தொடர்ந்து கல்லுண்டாய் பகுதியில் RO Plant அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில், தீவகத்துக்கான குடிநீர் விநியோக வலையமைப்பு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேலணை பிரதேசத்தில் அமைக்கப்படவிருந்த RO plant இயந்திரங்களை கல்லுண்டாய் பகுதியில் அமைக்க யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்து RO Plant நிறுவுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

கரவெட்டி தினகரன் நிருபர்

Tue, 10/26/2021 - 11:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை