ரிஷாத் MPக்கு எதிராக சாட்சியங்கள் உள்ளதா?

இருந்தால் சபையில் சமர்ப்பிக்க ரணில் கோரிக்கை

 

உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சாட்சியங்கள் உள்ளனவா என சட்டமா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வினவுமாறும் அவர் தவறு செய்திருந்தால் அந்த சாட்சிகளை சபைக்கு முன்வைக்குமாறும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி நேற்று சபாநாயகரிடம் கோரினார்.

சாட்சி இல்லாவிட்டால் அவரை விடுவிக்க வேண்டும். இது அந்த எம்.பி தொடர்பான பிரச்சினையை விட இது சபையின் சிறப்புரிமை தொடர்பான  பிரச்சினையாகுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்த அவர், மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணைகளை பொலிஸ் நிறைவு செய்துள்ளது. சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளாக சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரிஷாத் பதியுதீன் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் தவறு செய்திருந்தால் சாட்சி இருந்தால் இந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்கலாம். சாட்சி இல்லாவிட்டால் அவரை விடுவிக்க வேண்டும். இது அந்த எம்.பி தொடர்பான பிரச்சினையை விட இது சபையின் சிறப்புரிமை தொடர்பான பிரச்சினையாகும்.

விசாரணைகளுக்கு ஓரிரு மாதங்கள் பிடிக்கலாம். சட்ட மாஅதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி அவருக்கு எதிராக சாட்சியம் உள்ளதா? என சபாநாயகர் வினவ வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் தற்பொழுது சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கலாமென தடுத்துவைக்கப்பட்டுள்ளார். எம்.பி ஒருவர் வழக்கிற்கு தலையீடு செய்வதாக இருந்தால் அது சிக்கலான விடயம். தடுப்புக் காவலில் அவர் நீண்டகாலமாக வைக்கப்பட்டுள்ளார். அவர் தவறு செய்திருந்தால் அந்த சாட்சிகளை சபைக்கு முன்வையுங்கள் .அது தொடர்பில் சிறப்புரிமை குழுவில் ஆராயலாம். நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த சாட்சிகளை இந்த சபைக்கும் முன்வைக்க வேண்டும்.

ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒரு பகுதி சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. முழுமையான அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்கள் இங்கு இல்லாததால் அந்த முழுமையான அறிக்கையை பெறுவது குறித்து வேறெரு சமயத்தில் ஆராயலாம்.

பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எதிராகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னர் நான் தான் பொலிசுக்கு பொறுப்பாக இருந்தேன். அவர்கள் சரியாக செயற்பட்டார்கள். அந்த சமயம் சிங்கள தமிழ் புத்தாண்டு என்பதால் வேறு பணியில் அவர்கள் இருந்தார்கள். இசைக்கச்சேரிகள் கூட ஏற்பாடாகியிருந்தன. சைக்கிள் போட்டிகள் இருந்தன. பல்வேறு வைபவங்கள் இருந்தன. அரசாங்கம் அறிவித்தால் தான் பொலிஸார் அவற்றை கவனித்தனர். பொலிஸார் கம்பஹ மற்றும் கொழும்பில் தமது பொறுப்புகளை முன்னெடுத்தார்கள்.

அறிவித்தவுடன் அவை நிறுத்தப்பட்டன.இவை குறித்தும் சட்ட மாஅதிபரும் நீதி அமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும். ரிஷாத் பதியுதீன் போன்று எம்மையும் வேறு ஒருவருக்கு உதவியதாக பிடித்துச் செல்லலாம் .இது தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம் என்றார்.

 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்

Tue, 10/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை