பத்து நாட்டு தூதுவர்களுக்கு எதிராக துருக்கி பிரகடனம்

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட 10 நாடுகளின் தூதுவர்களை வரவேற்கப்படாத நபர்களாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் அறிவித்துள்ளார்.

இந்தத் தூதுவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் செயற்பாட்டாளர் ஒஸ்மான் கவாலாவை விடுதலை செய்யுமாறு அழுத்தம் கொடுத்ததை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கவாலா ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது மற்றும் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் மீது இதுவரை குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை.

வரவேற்கப்படாத நபர் என்ற நிலை, குறித்த நபரின் இராஜதந்திர அந்தஸ்தை நீக்க வழி வகுக்கும் என்பதோடு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவரை தூதுவராக அங்கீகரிப்பதில் இருந்து நீக்கப்படுவது அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலையை ஏற்படுத்தும்.

துருக்கியின் ஏழு நேட்டோ கூட்டாளிகள் உட்பட, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பின்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியுசிலாந்து, நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் கடந்த வாரம் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு ஒன்றிலேயே கவாலாவை விடுதலை செய்ய வலியுறுத்தப்பட்டது.

மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்றம் கவாலாவை விடுதலை செய்யுமாறு அளித்த தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு ஐரோப்பாவின் பிரதான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பான ஐரோப்பிய கவுன்சில் துருக்கிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் எஸ்கிஷேஹிரில் சனிக்கிழமை ஒரு கூட்டத்தில் பேசிய துருக்கி ஜனாதிபதி எர்துவான் “வெளி விவகாரத் துறை அமைச்சருக்கு தேவையான உத்தரவுகளையும், என்ன செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளேன். அந்த 10 நாட்டு தூதர்களும் ‘வரவேற்கப்படாத நபர்களாக’ உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்” என்றார்.

தூதர்கள் துருக்கியைப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது வெளியெற வேண்டும் என எர்துவான் கூறியதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை இது தொடர்பாக அந்நாட்டு தூதர்களிடமிருந்து பெரிய எதிர்வினைகள் எதுவும் வரவில்லை. சம்பந்தப்பட்ட நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஜெர்மனியின் வெளிநாட்டு விவகார அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் துருக்கி அதிகாரிகளிடமிருந்து வெளியாகவில்லை.

தங்கள் நாட்டு தூதர் வெளியேற்றப்படும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை என நோர்வே வெளிவிவகார அமைச்சகம் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது. துருக்கியின் வெளிவிவகாரத் துறை அமைச்சகம், 10 நாட்டு தூதர்களையும் கவாலா வழக்கு குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற கடந்த செவ்வாய்கிழமை வேண்டுகோள் விடுத்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

அந்த 10 நாட்டு தூதரகங்களும் துருக்கி செயற்பாட்டாளர் ஓஸ்மான் கவாலா வழக்கு விசாரணையில் உள்ள தொடர் தாமதத்தை குறிப்பிட்டு விமர்சித்திருந்தன. இது ஜனநாயகத்தின் மீதும், சட்டத்தின் மீதும், வெளிப்படைத் தன்மையின் மீதான மரியாதையை சீர்குலைக்கிறது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ஓஸ்மான் கவாலாவின் வழக்கில் விரைவாக ஒரு தீர்வு காணவும், அவரை உடனடியாக விடுவிக்கவும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

2013ஆம் ஆண்டு துருக்கியில் நடந்த போராட்டங்கள் தொடர்பான வழக்கிலிருந்து கடந்த ஆண்டு கவாலா விடுவிக்கப்பட்டார். ஆனால் 2016ஆம் ஆண்டு எர்துவான் அரசை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது தொடர்பான வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கவாலா தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். தன் மீதான விமர்சனங்களை எர்துவான் பரவலாக நசுக்குகிறார் என்று சொல்வதற்கான எடுத்துக்காட்டு இது என்கிறார்கள் எர்துவானின் விமர்சகர்கள்.

 

Mon, 10/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை